சார் வேண்டாம்.. நான் உங்கள் சகோதரன்: பீகார் பெண்ணிடம் மோடி வேண்டுகோள்
புதுடெல்லி: என்னை சார் என்று அழைக்காதீர்கள், நான் உங்கள் சகோதரர் என்று பீகாரில் உள்ள பெண் பா.ஜ பூத் ஊழியரிடம் மோடி பேசினார். பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜ பூத் ஊழியர்களிடம் நமோ செயலி மூலம் மெய்நிகர் முறையில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது ஒரு பெண் பூத் உறுப்பினர், பிரதமர் மோடியை சார் என்று அழைத்தார். உடனே குறுக்கிட்ட பிரதமர் மோடி, ‘ என்னை சார் என்று அழைக்காதீர்கள், நான் உங்கள் சகோதரர். அப்படியே கூப்பிடுங்கள். இந்த முறை பீகார் இரட்டை தீபாவளியைக் கொண்டாடப் போகிறது.
முதலில், ஜிஎஸ்டி காரணமாக நவராத்திரியின் முதல் நாளில் மக்கள் தீபாவளியைக் கொண்டாடினர். இப்போது, தீபாவளி அக்டோபர் 20 அன்று வருகிறது, அதை நாங்கள் கொண்டாடப் போகிறோம். ஆனால் இந்த முறை, நவம்பர் 14 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியைக் கொண்டாடும் மனநிலையில் பீகார் உள்ளது. பீகாரின் சகோதரிகள் மற்றும் மகள்கள் இதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். பெண் சக்தி எனது மிகப்பெரிய பலம், கேடயம் மற்றும் உத்வேகம். பீகாரில் உள்ள அனைத்து சகோதரிகளும் தாய்மார்களும் குழுக்களாக வாக்களிக்கச் சென்று, பாடல்களைப் பாடி, ஜனநாயகத் திருவிழாவைக் கொண்டாட வேண்டும்’ என்றார்.