தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு பீகாரில் ‘இறந்த’ வாக்காளர்களுடன் தேநீர் அருந்திய ராகுல் காந்தி: தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து பதிவு

புதுடெல்லி: பீகாரில் நடந்த சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு இறந்ததாக நீக்கப்பட்ட வாக்காளர்களை ராகுல்காந்தி சந்தித்து தேநீர் அருந்தினார். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டி வருகிறார். 2024 மக்களவை தேர்தலில் சுமார் 48 தொகுதிகளில் இதே போன்ற மோசடி நடந்துள்ளதாக அவர் புகார் தெரிவித்து உள்ளார்.

இந்த மோசடியை கண்டுபிடித்து விட்டதால் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கி உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த சூழலில் பீகாரைச் சேர்ந்த ஏழு வாக்காளர்கள் நேற்று டெல்லியில் ராகுல்காந்தியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார்கள். இவர்கள் அனைவரும் பீகார் வாக்காளர் பட்டியலில் நடந்த சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தொகுதியான ரகோபூரை சேர்ந்த ராமிக்பால் ரே, ஹரேந்திர ரே, லால்முனி தேவி, வச்சியா தேவி, லால்வதி தேவி, புனம் குமாரி மற்றும் முன்னா குமார் ஆகியோர் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தேர்தல் ஆணையத்தால் எவ்வாறு இறந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டனர் மற்றும் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் எப்போதும் உண்டு. ஆனால் ‘இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்த எனக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த தனித்துவமான அனுபவத்திற்காக, தேர்தல் ஆணையத்திற்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பீகார் வாக்காளர் பட்டியலில் இறந்ததாக கூறி நீக்கப்பட்ட அந்த வாக்காளர்களை சந்தித்தது தொடர்பான வீடியோவையும் அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர்கள் தேர்தல் நடைபெறவிருக்கும் பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் நாங்களும் இடம் பெற்றுள்ளோம் என்று தெரிவித்தனர். இதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் எங்கே?

2024 மக்களவை தேர்தல் வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பான புகார் எழுந்துள்ள நிலையில், அந்த தேர்தலை நடத்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் எங்கே இருக்கிறார் என்ற கேள்வி எழுந்தது. அவர் கடந்த பிப்ரவரி மாதம் தான் பதவி விலகினார். அவரது பதவிக்காலத்தில் தான் மக்களவை தேர்தல், மகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் அவர் பதவிக்காலம் முடிந்ததும், நாட்டை விட்டு வெளியேறி மால்டாவில் குடியேறி விட்டதாக தகவல் பரவியது. இதை அவரது உறவினர்கள் மறுத்துள்ளனர். ராஜீவ்குமார் இந்தியாவில் தான் உள்ளார், நாட்டை விட்டு வெளியேறவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

* 1968ல் திருமணம், 1980ல் பட்டியலில் பெயர் குடியுரிமை பெறும் முன்பு ேசானியாவுக்கு வாக்குரிமை

முன்னாள் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில்,’ 1946 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்த சோனியா மைனோவை 1980 முதல் 1982 வரை, அதாவது இந்திய குடியுரிமை பெறுவதற்கு ஒரு வருடம் முன்பு அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றது’ என்றார். பா.ஜ ஐடி விங் தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் பதிவில், 1980 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு நகல் ஒன்றை வெளியிட்டு,’ சோனியா காந்தி குடியுரிமை பெறாதபோது ஒரு வாக்காளராக இருந்தார் என்பதைக் குறிக்கிறது.

இது அப்பட்டமான தேர்தல் முறைகேடு இல்லையென்றால், என்ன? 1968 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியை மணந்த சோனியாகாந்தி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசித்து வந்தபோது வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டார். அதாவது 1980ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு புதுடெல்லி நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயரை இணைக்கப்பட்டது.

இந்தப் பதிவு இந்திய குடிமகனாக இருக்க வேண்டிய ஒருவரை வாக்காளராகப் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டத்தின் தெளிவான மீறலாகும். 1982 ஆம் ஆண்டு எழுந்த கண்டனத்தைத் தொடர்ந்து, அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு சோனியாகாந்தி இந்திய குடியுரிமை பெற்ற பிறகு மீண்டும் அவரது பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* எல்லாமே அதிகாரிகள் தான்

பா.ஜ குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் தாரிக் அன்வர் கூறுகையில், ‘சோனியா காந்தி பெயரை சேர்த்தது அப்போதைய தேர்தல் ஆணைய அதிகாரிகள்தான்’’என்றார்.

* தோற்றால் மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்?

பாஜ எம்பி அனுராக் தாக்கூர் கூறுகையில்,’ வாக்காளர் பட்டியல் தொடர்பான புகாரில் காங்கிரஸ் சுயபரிசோதனையைத் தவிர்க்கிறது. 1952 இல் இருந்து தொடங்கினால், காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் இணைந்து அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரும் துறவி போன்ற தலைவருமான டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரை தேர்தலில் தோற்கடித்தன.

1952 ஆம் ஆண்டின் முதல் தேர்தலிலேயே காங்கிரஸ் தேர்தல் ஊழலுக்கு அடித்தளமிட்டது. இந்தக் குடும்பமும், கட்சியும் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருந்தனர். நீங்கள் தேர்தலில் தோற்றால், தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் அல்லது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து கேள்விகளை எழுப்புகிறீர்கள்’ என்றார்.

* ரேபரேலியில் 2.99 லட்சம் வயநாட்டில் 93,499 பேர்

அனுராக் தாக்கூர் கூறுகையில், ‘மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட்டு வென்ற ரேபரேலி தொகுதியில் சுமார் 2.99 லட்சம் சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் சுமார் 93,499 சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.

* மேற்கு வங்க தலைமை செயலாளர் தேர்தல் ஆணையம் முன் ஆஜர்

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்த புகாரில் மேற்குவங்க அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து எப்ஐஆர் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இதை செய்யாததால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மேற்கு வங்க தலைமைச் செயலாளர் மனோஜ் பந்த்திற்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியது.

இதை ஏற்று டெல்லி சென்ற மனோஜ் பந்த் நேற்று மாலை 4.30 மணியளவில் தேர்தல் ஆணையம் முன் ஆஜரானார். பின்னர் மாலை 6 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்களை சந்தித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சந்திப்பு குறித்து கேட்டபோது, பந்த் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

* மோடி தொகுதியில் ஒரு தந்தைக்கு 50 மகன்களா?

பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் ஒரே நபருக்கு 50 மகன்கள் என வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாக காங்கிரஸ் கிளப்பிய குற்றச்சாட்டு, உத்தரபிரதேசத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வாரணாசி மாநகராட்சியின் 51வது கோட்டத்தில் உள்ள காஷ்மீரிகஞ்ச் பகுதியி ல் ராம் கமல் தாஸ் என்ற ஒரே நபரின் மகன்களாக 50க்கும் மேற்பட்டோர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதை ஆய்வு செய்தபோது அது ஆச்சார்யா ராம் கமல் தாஸ் என்பவரால் நிறுவப்பட்ட ராம் ஜானகி மடம் என்பது தெரியவந்தது. மடத்தில் உள்ள துறவிகள், மடத்தின் தலைவர் பெயரில் வாக்காளர் அட்டை பதிவு செய்ததால் இந்த பிரச்னை எழுந்துள்ளது தெரிய வந்துள்ளது.

* ஆந்திரா வாக்கு திருட்டு பற்றி ராகுல்காந்தி பேசாதது ஏன்?

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தாடேப்பள்ளியில் அளித்த பேட்டி: ஒன்றிய அரசின் முக்கிய கூட்டாளியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஹாட்லைனில் தொடர்பில் உள்ளார். அதனால் தான் வாக்கு திருட்டு குறித்து ஆந்திராவை பற்றி ராகுல் பேசவில்லை என்றார்.

* குஜராத்தில் வசிப்பவர் பீகார் வாக்காளரா?

பாட்னாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “தற்போது குஜராத்தில் வசிப்பவர்கள் பீகார் வாக்காளர்களாக மாறுகிறார்கள். குஜராத்தில் வசிக்கும் பாஜவின் பீகார் பொறுப்பாளர் பிகுபாய் தல்சானியா பீகார் வாக்காளராக மாறி விட்டார்.

அவர் கடந்த மக்களவை தேர்தலில் குஜராத்தில் வாக்களித்தார். பீகார் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இந்தியில் இல்லாமல் குஜராத்தி மொழியில் இருக்கிறது. எதிர்க்கட்சியினரின் வாக்குகளை பறிக்கவும், பாஜவுக்கு ஆதரவாக வாக்குகளை சேர்க்கவும் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. இது தேர்தல் ஆணையத்தின் நேர்மையின்மையை காட்டுகிறது’ என்றார்.