பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பற்றி விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு
புதுடெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பற்றி விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் பீகார் சிறப்பு திருத்தம் பற்றி விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரினர். இதனால் அமளி ஏற்பட்டதால் மதியம் 2 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு பிறகு மீண்டும் அவை கூடிய போது பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக எம்பிக்கள் கோஷமிட்டனர்.
அமளிக்கிடையே கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா 2025 எடுத்து கொள்ளப்பட்டது. தொடர்ந்து கோஷம் எழுப்பி கொண்டே அவையின் மைய பகுதிக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் வந்தனர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சிறிது நேரம் பேச மாநிலங்களவை துணை தலைவர் அனுமதி அளித்தார். அவர் பேசுகையில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். நாட்டின் நலனுக்காக எதிர்க்கட்சிகள் எதையும் செய்யும் என்றார்.
அப்போது அவை முனைவர் ஜே.பி. நட்டா எழுந்து மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என வேண்டு கோள் விடுத்தார். அப்போது அவையில் கடும் அமளி ஏற்பட்டது. அமளிக்கிடையே மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையிலும் பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட பல விஷயங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதனால் அலுவல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது.