பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரம் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: கூச்சல் குழப்பத்துக்கிடையே மசோதா நிறைவேற்றம்
புதுடெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளி செய்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை மாநிலங்கவையில் அமளியின் போது ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினர் அவைக்குள் நுழைந்து எதிர்க்கட்சி எம்பிக்களை தடுத்ததாக கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்நிலையில் மாநிலங்களவை நேற்று காலை தொடங்கியதும், அவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் தனக்கு எழுதிய கடிதத்தை மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஊடகங்களுக்கு பகிர்ந்தது குறித்து கவலை தெரிவித்தார். இது குறித்து கார்கே அவையில் பேசுகையில், ‘‘நாங்கள் என்ன தீவிரவாதிகளா? அவை காவலர்கள் மட்டுமே அவைக்குள் நுழைய வேண்டும்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு எப்படி அனுமதி தரலாம்? இதுவரை சிஐஎஸ்எப் படையினர் அவையில் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டதே கிடையாது’’ என்றார். அதற்கு அவையின் துணைத்தலைவர் ஹரிவன்ஸ், ‘‘அவர்கள், நாடாளுமன்ற பாதுகாப்பு சேவை பிரிவை சேர்ந்த பணியாளர்களே தவிர சிஐஎஸ்எப் வீரர்கள் கிடையாது. அவர்கள் அவை பாதுகாப்பை கவனிப்பது ஒன்றும் புதிதல்ல’’ என்றார்.
இதனால் ஏற்பட்ட அமளியால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியதும், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு நடுவே, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பது மற்றும் சுங்க வரிச்சட்டத்தில் 2வது அட்டவணையை திருத்துவது உள்ளிட்ட 2 தீர்மானங்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
இதே போல, மக்களவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டு பகல் 2மணிக்கு மீண்டும் கூடியபோது, பீகார் விவகாரத்தில் கூச்சல் குழப்பத்துக்கு நடுவே, கோவா சட்டப்பேரவையில் எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
* காங்கிரஸ் என்னிடம் டியூஷன் படிக்க வேண்டும்: நட்டா
மாநிலங்களவையில் அமளிக்கிடையே அவை முன்னவரும் ஒன்றிய அமைச்சருமான ஜே.பி.நட்டா பேசுகையில், ‘‘அவையில் மற்ற உறுப்பினர்கள் பேசுவதை காங்கிரஸ் எம்.பி.க்கள் தடுக்கிறார்கள். இது அராஜகம். திறமையான எதிர்க்கட்சியாக எப்படி செயல்படுவது என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் என்னிடம் டியூஷன் படிக்க வேண்டும். நான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சியில் இருக்கிறேன், என்னிடம் பயிற்சி பெற்றால் எதிர்க்கட்சியாக எப்படி செயல்படுவது என்பதை நான் உங்களுக்குச் சொல்லி தருகிறேன். இடையூறு ஏற்படுத்த பல வழிகள் உள்ளன” என்று கூறினார்.