பீகாரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 47 லட்சம் பேர் நீக்கம்
பாட்னா: பீகாரில் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதில் 65 லட்சம் பேரின் பெயர்கள் வரைவு பட்டியலில் நீக்கப்பட்டது. இதையடுத்து வரைவு பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
திருத்த நடைமுறைகள் முடிவடைந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7.42 கோடியாக உள்ளது. வரைவு பட்டியல் திருத்த காலத்தில் விடுபட்ட 21.53 லட்சம் தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்பட்டதாகவும், 3.66 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வரைவு பட்டியலில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலில் 47 லட்சம் பேரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.