பீகாரில் வாக்கு திருட்டுக்குப் பிறகு வாக்குகளுக்காக இலவசங்கள் அறிவிக்கிறார் பிரதமர் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடெல்லி: வாக்கு திருட்டில் ஈடுபட்ட பிரதமர் மோடி இப்போது வாக்குகளுக்காக சலுகைகளை அறிவிக்கிறார் என காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது: கடந்த 2023 ல் கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.இதில் 1.3 கோடி பெண்கள் பயன் அடைகின்றனர். பெண்களுக்கு வழங்கப்படும் இந்த நிதியுதவி பற்றி பிரதமர் மோடி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
ஆனால் பீகாரில் நேற்று முன்தினம் ரூ.10,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை மோடி காணொலி மூலம் துவக்கி வைத்தார். அங்கு விரைவில் சட்ட பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாவதற்கு முன் இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்துள்ளார். வாக்கு திருட்டுடன் இப்போது வாக்குகளுக்காக அவர் இலவசங்களையும் அறிவிக்கிறார். ஒரு அவநம்பிக்கை நடவடிக்கையான இதை பீகார் பெண்கள் நன்கு அறிந்து கொள்வார்கள். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதவியில் இருந்து இறங்குவதற்கான நேரம் ஏற்கனவே தொடங்கி விட்டது. நிதிஷ்குமாரும் கடந்த காலமாகி விட்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் மோடியும் கடந்த காலமாகி விடுவார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.