17ம் தேதி பீகாரில் வாக்கு அதிகார யாத்திரை தொடக்கம் ராகுல், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் வாக்குகள் திருட்டுக்கு எதிராக வரும் 17ம் தேதி பீகாரில் வாக்கு அதிகார யாத்திரை தொடங்குகிறது. காங்கிரஸ் பொது செயலாளர் வேணுகோபால் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது: மிக பயங்கரமான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பீகாரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிரான மக்கள் இயக்கம் வரும் 17ம் தேதி பீகாரில் உள்ள சசாராமில் தொடங்குகிறது.
இதில் ராகுல் காந்தி,ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மாநிலம் முழுவதும் நடத்தப்படும் யாத்திரை வரும் செப்டம்பர் 1ம் தேதி பாட்னாவில் நிறைவடையும்.இதில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேசிய மாணவர் அமைப்பின்(என்எஸ்யுஐ) பொறுப்பாளர் கன்னையா குமார்,‘‘சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப்படும். வரும் 22ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை வாக்கு திருடர்களே பதவிகளை ராஜினாமா செய்யுங்கள் என வலியுறுத்தி அனைத்து மாநில தலைநகரங்களில் பேரணி நடத்தப்படும். அதை தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்’’ என்றார்.