பீகாரில் மீண்டும் சர்ச்சை டிரம்ப் பெயரில் இருப்பிட சான்றிதழ் கேட்டு விண்ணப்பம்
சமஸ்திப்பூர்: பீகாரின் சமஸ்திபூர் மாவட்டம்,ஹசன்பூர் என்ற கிராமத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் இருப்பிட சான்றிதழ் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29ம் தேதி ஆன்லைனில் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர் டொனால்ட் டிரம்ப் என்று குறிப்பிட்டு புகைப்படம் இணைக்கப்பட்டிருந்தது. அவருடைய பெற்றோர் பெயர்களில் தந்தை பெடரிக் கிறிஸ்ட் டிரம்ப் மற்றும் தாய் மேரி ஆனி மேக் லியோட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சுதாரித்து கொண்ட மாவட்ட நிர்வாகம் டிரம்ப் பெயரில் இருப்பிட சான்று கோரி குறும்பில் ஈடுபட்ட நபர் மீது வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது.
அரசு நிர்வாகத்தின் நம்பிக்கையையும், நேர்மையையும் சிதைக்கும் வண்ணம், திட்டமிட்டு இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ள அதிகாரிகள், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளதாக விளக்கம் அளித்து உள்ளனர்.சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர். சமீபத்தில் பாட்னாவில் நாய் பாபு என்ற பெயரில் நாய்க்கு இருப்பிட சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.கிழக்கு சம்பரானில் போஜ்புரி நடிகை சோனாலிகா டிராக்டர் பெயரில் இருப்பிட சான்றிதழ் கோரி ஒருவர் விண்ணப்பித்துள்ளார். பீகாரில் இருப்பிட சான்றிதழ் கோரி வினோதமான முறையில் விண்ணப்பம் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா மாநில அரசை விமர்சித்துள்ளார்.