பீகாரில் 65 கி.மீ. தூரத்திற்கு ஸ்தம்பித்த போக்குவரத்து 4 நாளாக நகர முடியாமல் தவிக்கும் வாகனங்கள்: லாரி ஓட்டுநர்கள் கதறல்; அதிகாரிகள் அலட்சியம்
புதுடெல்லி: பீகாரில் பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஓட்டுநர்கள் நான்காவது நாளாக கடும் அவதியடைந்து வருகின்றனர். பீகாரின் ரோக்தாஸ் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த பெரும் மழையால், டெல்லி-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை எண் 19-ல் ஆறு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மாற்றுப்பாதைகள் மற்றும் சேவைச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால், சாலைகள் எங்கும் பள்ளங்கள் உருவாகி, மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசல் தற்போது ரோக்தாஸ் முதல் அவுரங்காபாத் வரை சுமார் 65 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டுள்ளது. வாகனங்கள் 24 மணி நேரத்தில் வெறும் 5 கிலோமீட்டர் தூரம் மட்டுமே நகர முடிவதாக ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நெரிசலில் சிக்கியுள்ள லாரி ஓட்டுநர் பிரவீன் சிங் கூறும்போது, ‘கடந்த 30 மணி நேரத்தில் நாங்கள் வெறும் 7 கிலோமீட்டர் மட்டுமே பயணித்துள்ளோம். சுங்கக் கட்டணம், சாலை வரி என அனைத்தையும் செலுத்தியும் பல மணி நேரமாக நெரிசலில் சிக்கித் தவிக்கிறோம். தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளோ, உள்ளூர் நிர்வாகத்தினரோ யாரும் இங்கு வந்து பார்க்கவில்லை’ என்று கண்ணீருடன் குறிப்பிட்டார்.
மற்றொரு ஓட்டுநரான சஞ்சய் சிங், ‘இரண்டு நாட்களாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளோம். பசி, தாகத்தால் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம்’ என்றார். விரைவில் கெட்டுப்போகும் உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர்கள், சரக்குகள் வீணாகிவிடுமோ என்ற அச்சத்திலும், ஆம்புலன்ஸ்கள் போன்ற அவசர ஊர்திகள் செல்ல முடியாமலும் மக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் ரஞ்சித் வர்மாவிடம் கேட்டபோது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.