பீகாரில் வீட்டிற்கு ஒரு அரசு வேலை 20 நாட்களுக்குள் சட்டம் இயற்றப்படும்: பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.30ஆயிரம் தேஜஸ்வி யாதவ் அதிரடி பிரசாரம்
ககாரியா: பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க 20 நாட்களுக்குள் சட்டம் இயற்றப்படும் என்று தேஜஸ்வியாதவ் தெரிவித்துள்ளார்.பீகார் சட்டப்பேரவைக்கு நவ.6, நவ.11 ஆம் தேதிகளில் இரண்டு கட்ட தேர்தல் நடக்கிறது. அங்கு மனுத்தாக்கல் முடிந்து விட்டதால் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. பர்பட்டா தொகுதி சஞ்சீவ் குமாரை ஆதரித்து ககாரியா மாவட்டத்தில் உள்ள கோக்ரியில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:
பீகாரை முதலிடத்தில் வைக்க வேண்டும், அதற்காக முதலீடுகளைக் கொண்டு வர வேண்டும், கல்வியை மேம்படுத்த வேண்டும் மற்றும் சரியான சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டும். இதுதான் இந்தியா கூட்டணியின் நோக்கம். பீகாரில் தொழிற்சாலைகளை அமைத்து, பீகாரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முதலீட்டைக் கொண்டு வருவோம். ஆனால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் முதல்வர் நிதிஷ்குமாரை கடத்திச்சென்று விட்டனர். அவர்களால் இனி பீகாரை வழிநடத்த முடியாது.
பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு வேலைகளை வழங்க 20 நாட்களுக்குள் ஒரு சட்டம் இயற்றப்படும். 20 மாதங்களில் ஆட்சேர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். வேலையில்லாத பட்டதாரிகளின் வலியை என்னால் பார்க்க முடியவில்லை. வாக்குறுதியளிக்கப்பட்ட வேலைகளை வழங்குவதற்கான நிதியை எங்கிருந்து கொண்டு வருவேன் என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு, சில நாட்களில் எனது திட்டத்தை வெளிப்படுத்துவேன். எங்கள் அரசாங்கம் அமைக்கப்பட்ட சில வாரங்களுக்குள் பெண்களுக்கு ஒரே தவணையில் ஆண்டுக்கு ரூ.30,000 வழங்குவதுடன் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் சமூக அணிதிரட்டல் செய்பவர்களின் சேவைகளை முறைப்படுத்தும் நடவடிக்கை ெதாடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.