பீகார் மக்களுக்கு வாக்குறுதி 1 கோடி பேருக்கு அரசு வேலை: விவசாயிகள், மீனவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.9000, பா.ஜ கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை தேசிய ஜனநாயக கூட்டணி வெளியிட்டது. அதில் ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை, விவசாயிகளுக்கு ரூ.9 ஆயிரம் நிதியுதவி உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. பீகார் சட்டப்பேரவைக்கு நவ.61 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு விட்டது. நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
69 பக்க தேர்தல் அறிக்கையை பாட்னாவில் வைத்து பாஜ தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வான், பீகார் பாஜ தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான், ஒன்றிய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சி ஆகியோர் வெளியிட்டனர். அதில் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலைகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள்.
* விவசாயிகளுக்கு அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம்.
* கிசான் சம்மன் நிதி திட்டத் தொகை ஆண்டுக்கு ரூ.6,000 லிருந்து ரூ.9,000 ஆக உயர்த்தப்படும்.
* 50 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்.
* ஒரு கோடி லட்சாதிபதி பெண்கள் உருவாக்கப்படுவார்கள்.
* மாவட்டங்களில் உள்ள பெரிய பள்ளிகள் மொத்தம் ரூ.5,000 கோடி ஒதுக்கீட்டில் மாற்றப்படும்.
* மாதா ஜானகியின் பிறந்த இடம் உலகத் தரம் வாய்ந்த ஆன்மீக நகரமான ‘சீதாபுரம்’ ஆக மேம்படுத்தப்படும்.
* தர்பங்கா, பூர்னியா மற்றும் பாகல்பூரில் சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
* பாட்னா, தர்பங்கா, பூர்னியா மற்றும் பாகல்பூரில் மெட்ரோ ரயில் திட்டங்கள் அமைக்கப்படும்.
* பீகார் விளையாட்டு நகரம் மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்
* ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தொழிற்சாலை மற்றும் 10 தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.
* 100 சிறுகுறு தொழில் பூங்காக்கள் மற்றும் 50,000க்கும் மேற்பட்ட குடிசைத் தொழில்கள் அமைக்கப்படும்.
* ஒவ்வொரு பிரிவிலும் பாதுகாப்பு வழித்தடம் மற்றும் குறைக்கடத்தி உற்பத்தி பூங்காக்கள் நிறுவப்படும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான குடியிருப்புப் பள்ளிகள்.
* உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு மாதத்திற்கு ரூ.2,000.
* பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதி பிரிவு மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை உதவி.
* கேஜி முதல் முதுகலை படிப்பு வரை ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான இலவச கல்வி .
* ஏழு விரைவுச் சாலைகள் அமைக்கப்படும், 3,600 கி.மீ. ரயில் பாதைகள் நவீனமயமாக்கப்படும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ நகரம் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் மேம்பாடு.
* ஏழை குடும்பங்களுக்கு 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* தமிழகத்தை காப்பியடித்து காலை உணவு திட்டம்
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், திமுக அரசின் திட்டத்தை காப்பி அடித்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பீகாரில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வியுடன் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
* நிதிஷ்குமாரை பேசவிடவில்லை
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’ தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் தங்கள் பத்திரிகையாளர் சந்திப்பை வெறும் 26 வினாடிகளில் முடித்துவிட்டனர். ஏனெனில் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். எனவே, பொதுமக்களின் கேள்விகளை எதிர்கொள்வது அவர்களுக்கு நேரத்தை வீணடிப்பது போல் நான் உணர்ந்தேன். முதல்வர் நிதிஷ் குமார் செய்தியாளரிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவரே தனது தேர்தல் அறிக்கையை சரியாகப் படிக்காமல் இருந்திருக்கலாம்’ என்றார்.
* பிரசாந்த் கிஷோர் ஆதரவாளர் சுட்டுக்கொலை
பீகார் டிஜிபியிடம் விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
பீகார் மாநிலம் மொகாமா தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு இருந்த பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி நிர்வாகி துலர்சந்த் யாதவ் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக நேற்று பீகார் டிஜிபியிடம் விரிவான விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
* ஒரு நிமிடத்திற்குள் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை
தேசிய ஜனநாய கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று பீகார் தலைநகர் பாட்னாவில் வெளியிடப்பட்டது. இதற்கு பத்திரிகையாளர்களை அழைத்து இருந்தனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமார்,துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, பா.ஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜிதன் ராம் மஞ்சி, சிராக் பாஸ்வான் மற்றும் கூட்டணி தலைவர்கள் வந்திருந்தனர். அவர்கள் வெறும் 26 வினாடிகளில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டு, ஒரு நிமிடத்திற்குள் அந்த இடத்தை விட்டு வெளியேறினர். தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள தலைவர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று மேடையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
* எங்கள் தேர்தல் அறிக்கையின் காப்பி தேஜஸ்வியாதவ் விமர்சனம்
தேஜஸ்வி கூறுகையில்,’ அவர்கள் எல்லாவற்றையுமே காப்பி அடிக்கிறார்கள். அவர்களின் வாக்குறுதிகள் அனைத்தும் எங்கள் தேர்தல் அறிக்கையைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்டவையே. எங்கள் தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தோம். அப்போது, ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு எவ்வாறு அரசு வேலை வழங்க முடியும்;
அவ்வளவு வேலை வாய்ப்பை எப்படி உருவாக்க முடியும் என்று எங்களைப் பார்த்து கேள்வி கேட்டார்கள். தற்போது அவர்கள் ஒரு கோடி பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்கள். உண்மையில் 20 ஆண்டுகளாக தோல்வி அரசை கொடுத்ததற்காக அவர்கள் பிஹாரின் 14 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உண்மை முகத்தை பீகார் மக்கள் அறிந்துவிட்டார்கள். இம்முறை அவர்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்’ என்றார்.