பீகாரில் நெகிழ்ச்சி: ரயிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர்
பாட்னா: பீகாரில் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம் பக்சரை சேர்ந்தவர் கோலு யாதவ். இவர் ரயில் பயணத்தின் போது பிச்சை எடுத்து கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை பார்த்தார். அப்பெண்ணிடம் சில பயணிகள் தவறாக நடந்து கொண்டதாகவும், தேவையற்ற பேச்சுகளையும் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அந்த பெண் மனமுடைந்தார். அந்த பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்க எண்ணிய தன் வீட்டுக்கு அழைத்து சென்றார். பெற்றோரிடம் விவரத்தை கூறி அடைக்கலம் கொடுத்தார். நாட்கள் செல்லச்செல்ல, பெற்றோரின் சம்மதத்துடன், அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் கோலு யாதவ். இந்த தம்பதியின் திருமண புகைப்படங்கள்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி, பலரின் கவனத்தை ஈர்த்தன.
ரெடிட் தளத்தில், “இது ஒரு அழகான திரைப்படம் போல இருக்கிறது” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த படங்களைப் பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர். ஒரு பயனர், “அக்ஷய் குமார் இப்போது இந்த கதையைப் படமாக எடுப்பார்” என்று எழுதியிருந்தார். இன்னொருவர், “அவர் அந்த பெண்ணின் வாழ்க்கையை சரி செய்ததுடன், தங்கள் இருவரின் வாழ்க்கையையும் ஒன்றிணைத்தார். இது ஒரு பாலிவுட் படம் போலவே இருக்கிறது” என்று ஆச்சரியப்பட்டார். இன்னும் சிலர் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கிறது என கருத்து பதிவிட்டுள்ளனர். யாசகம் கேட்போர் நம்மை தொட்டு யாசகம் கேட்டாலே நம்மில் பலர் கோபடைகிறோம். பலர் ஜாதி, மதம் பார்க்கின்றனர். ஆனால் எதுவுேம தெரியாமல் அந்த பெண்ணை திருமணம் செய்ய இந்த இளைஞருக்கு எத்தனை பெரிய மனம் வேண்டும் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.