ஆசிரியர் பணி தேர்வில் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை: பீகார் முதல்வர் நிதிஷ் அறிவிப்பு
பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜ கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்தாண்டு இறுதியில் மாநில சட்ட பேரவைக்கு தேர்தல் நடக்கிறது. பேரவை தேர்தலையொட்டி முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார். இந்த நிலையில், ஆசிரியர் பணிக்கான தேர்வில் வசிப்பிட கொள்கை இந்தாண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று நிதிஷ் அறிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசு ஆசிரியர் பணிக்கான தேர்வில் பீகாரில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க தொடர்புடைய விதிகளில் திருத்தங்கள் செய்ய கல்வி துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தாண்டு நடத்தப்படும் அரசு ஆசிரியர் பணிக்கான தேர்வில் இருந்து இது செயல்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.