பீகார் மாநில முதல்வராக 10வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார்: துணை முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்பு
பாட்னா: பீகார் மாநில முதல்வராக 10வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். பீகார் சட்டப்பேரவைக்கு நவ.6 மற்றும் 11ஆம் தேதிகளில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. இதையடுத்து நேற்று பீகார் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. பாட்னாவில் நடைபெற்ற புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் நிதிஷ் குமார் அந்தகட்சியின் சட்டப்பேரவை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் ஐக்கிய ஜனதா தளம்(85), பா.ஜ (89), சிராக் பாஸ்வான் கட்சியான எல்ஜேபி (ஆர்வி) (19), எச்ஏஎம் (5), ஆர்எல்எம் (4) கட்சி எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்வர் பதவிக்கு நிதிஷ்குமார் பெயரை ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் விஜய் சவுத்ரி முன்மொழிந்தார். துணை முதல்வர்களும், பா.ஜ எம்எல்ஏக்களுமான சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோர் ஆதரித்தனர். கூட்டணி கட்சிகளான எல்ஜேபி(ஆர்வி), எச்ஏஎம், ஆர்எல்எம் எம்எல்ஏக்களும் இந்த முன்மொழிவை ஆதரித்தனர்.
இந்த கூட்டம் முடிவுக்கு வந்ததும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் தலைவர்கள் கவர்னர் மாளிகைக்கு சென்றனர். நிதிஷ்குமாருடன் ஒன்றிய அமைச்சர்கள் சிராக் பாஸ்வான், ராஜீவ் ரஞ்சன் சிங் லாலன், தர்மேந்திர பிரதான், ஆர்.எல்.எம் தலைவர் உபேந்திர குஷ்வாஹா, உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோரும் சென்றனர். அங்கு ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து முதல்வர் நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். மேலும் சட்டப்பேரவையை கலைக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையும் ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையியில் பீகார் மாநில முதல்வராக 10வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு ஆளுநர் ஆரிஃப்கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வராக இருந்த பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, அமைச்சராக பதவியேற்கிறார். பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேசம், ஆந்திரா, டெல்லி முதல்வர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றுள்ளனர்