பீகாரை போல் தமிழ்நாட்டிலும் பறிக்க பாஜ சதி வாக்குரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்: தென்காசியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு
தென்காசி: பீகாரை போல் தேர்தல் ஆணையம் மூலம் தமிழ்நாட்டின் வாக்குரிமையை பறிக்க பா.ஜ. சதி செய்கிறது. தமிழ்நாட்டின் மக்களின் வாக்குரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று தென்காசியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தென்காசியில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.141. 60 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 117 திட்டப் பணிகளை அர்ப்பணித்து, ரூ.291.19 கோடி மதிப்பில் 83 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் 2 லட்சத்து 44 ஆயிரத்து 469 பேருக்கு ரூ.587 கோடியே 39 லட்சம் என மொத்தம் ரூ.1020.17 கோடி மதிப்பிலான திட்டங்களை அர்ப்பணித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் நமது திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, அனைத்து வகையிலும், அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றி வருகிறோம். ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்பதை நோக்கமாக கொண்டு, அனைத்து மாவட்டங்களையும் வளர்த்து வருகிறோம். வடகிழக்குப் பருவமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழைநீர் தேங்கி பாதிக்கப்படக் கூடாது. மக்கள் அச்சமில்லாமல், தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட உதவும் வகையில் அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. மக்களைக் காக்க எங்களுக்கு யாரும் சொல்லித் தர தேவையில்லை.
நாம் ஆட்சிக்கு வந்து 3 முறை இயற்கை பேரிடர்களை நாம் சந்தித்துள்ளோம். வேண்டிய உதவிகளை செய்து மக்களைக் காப்பாற்றினோம். ஆனால், பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்புகளை சரி செய்ய, நிவாரணப் பணிகளுக்கு நாம் கேட்ட ரூ.37 ஆயிரம் கோடி ஒன்றிய பாஜ அரசு வழங்கியதா? இதுவரைக்கும் வழங்கவில்லை. ஏன் வழங்கவில்லை? அப்படி வழங்கினால், தமிழ்நாடு சீராகிவிடும், வளர்ந்து விடும் என்று ஒன்றிய அரசு நினைக்கிறது. ஒன்றிய அரசு பணம் வழங்கினாலும், வழங்காமல் போனாலும் தமிழ் மக்களைக் காப்பது தான் நமது கடமை. என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை.
தற்போது தேர்தல் ஆணையம் மூலமாக, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் நம்முடைய வாக்குரிமையை பறிக்கின்ற சதியை அறிவித்துள்ளனர். ஏற்கனவே, பீகாரில், இதனால் என்ன நடந்தது என்று நாம் பார்த்தோம். பாஜ தோல்வி உறுதியானால், வாக்காளர்களையே நீக்கத் துணிந்தார்கள். அந்த பார்முலாவை தமிழ்நாட்டிலும் இப்போது முயன்று பார்க்கிறார்கள். தொடக்கம் முதலே இந்த சதியை உணர்ந்து நாம் அனைத்து வகையிலும், இதை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது கேரளாவும் நம்முடன் இதில் இணைந்துள்ளது.
இது தொடர்பாக, நமது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க, வரும் நவ. 2ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நான் கூட்டவிருக்கிறேன். அழைப்பு விடுத்திருக்கிறேன். அனைவருக்கும் அழைப்பு சென்றிருக்கிறது.
இந்த மேடையிலிருந்து மீண்டும் உறுதியாக சொல்கிறேன். ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமைதான். அதை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம். வாக்குரிமைப் பறிப்பு, வாக்குத் திருட்டு போன்ற பாஜவின் முயற்சிகளை முறியடிப்போம். தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்போம்.
மக்களாட்சியை காப்பாற்றுவதற்கான இந்த முன்னெடுப்பில், அனைத்துக் கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பங்கெடுக்க வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். இயற்கைப் பேரிடராக இருந்தாலும், செயற்கையான அரசியல் சதியாக இருந்தாலும் எல்லாவற்றிலும் இருந்து மக்களைக் காப்பதுதான் நமது பணி. நான் முதலில் சொன்னது போல, மகத்தான உங்களை மகிழ்விக்கவே இந்த ஆட்சி. மக்களைக் காக்கவே இந்த ஆட்சி. மக்களை வளர்க்கவே இந்த ஆட்சி. மக்களுக்கு தேவையானதை கொடுக்கவே இந்த ஆட்சி. இந்த நல்லாட்சி எந்நாளும் தொடரும். தொடரும். தமிழ்நாட்டின் வளம் பெருகும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
* மாணவர்களுடன் உற்சாகமாக சிலம்பம் சுற்றிய முதல்வர்
தென்காசி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை வடக்கு அரியநாயகிபுரத்திலிருந்து சாலை மார்க்கமாக சென்றார். பரங்குன்றாபுரம் விலக்கு அருகில் முதல்வர் வந்த போது தற்காலிகமாக அமைக்கப்பட்ட கலைஞர் சிலை முன்பு நின்றிருந்த சிலம்பம் பயிற்சி குழு மாணவ-மாணவிகள் சிலம்பம் சுற்றி முதல்வரை வரவேற்றனர். அப்போது, வாகனத்தில் இருந்து இறங்கி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றுவதை ரசித்தார். தொடர்ந்து உற்சாக மிகுதியில் ஒரு மாணவியிடமிருந்து சிலம்பத்தை வாங்கிய முதல்வர் பிரமாதமாக சிலம்பம் சுற்றி அவர்களை மகிழ்வித்தார். அப்போது மாணவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். முதல்வர் சிலம்பம் சுற்றுவதை பார்த்து அங்கு கூடியிருந்த மக்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். இதைதொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றார்.