பீகார் பேரவை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியில்லை
பாட்னா: பீகார் பேரவை தேர்தலையொட்டி, பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கி இருந்தார். பேரவை தேர்தலில் தன் சொந்த தொகுதியான கர்கஹார் அல்லது ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் தேஜஸ்வி யாதவின் கோட்டையாக கருதப்படும் ராகோபூர் தொகுதியில் போட்டியிட போவதாக முன்பு தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது ராகோபூர் தொகுதியில் ஜன் சுராஜ் வேட்பாளராக சஞ்சல் சிங் என்பவரை பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். இந்நிலையில் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர், “பேரவை தேர்தலில் நான் எந்த தொகுதியிலும் போட்டியிட மாட்டேன். நான் போட்டியிட்டால் பேரவை தேர்தல் பணிகள் பாதிக்கப்படும். எனவே, கட்சியின் நன்மைக்காக கட்சி வளர்ச்சியில் கவனம் செலுத்த உள்ளேன்” என்று கூறினார்.
* தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்ட கிஷோர் - ஆர்ஜேடி, ஜேடியு விமர்சனம்
ராஷ்ட்ரிய ஜனதா தள செய்தி தொடர்பாளர் மிருத்யுஞ்செய் திவாரி கூறுகையில், “ போர்க்களத்துக்கு போகும் முன்பே ஜன் சுராஜ் கட்சி தோல்வியை ஏற்று கொண்டது” என விமர்சித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தள செய்தி தொடர்பாளர் நீரஜ் குமார் கூறுகையில், “தேர்தலுக்கு முன் மக்கள் பிரச்னைகளை புரிந்து கொள்ள பாதயாத்திரை சென்ற பிரசாந்த் கிஷோர், இப்போது தேர்தல் போருக்கு போகும் முன்பே ஓடி விட்டார். அவரது இந்த முடிவு அவரது கட்சியினருக்கு பெரும் அவமானம்” என விமர்சித்துள்ளார்.