பீகார் சட்டப்பேரவை தேர்தல் இந்தியா கூட்டணியில் இருந்து ஹேமந்த் சோரன் கட்சி விலகல்: 6 தொகுதிகளில் தனித்து போட்டி
பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் இருந்து ஹேமந்த் சோரன் கட்சி விலகுவதாக அறிவித்து உள்ளது. 243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 121 தொகுதிகளில் நவ.6ஆம் தேதியும், 122 தொகுதிகளில் நவ.11ஆம் தேதியும் தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தலில் மனுத்தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. நேற்று மனு பரிசீலனை நடந்தது. முதற்கட்ட தேர்தல் நடக்கும் 121 இடங்களுக்கு 1,250 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளில் மனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். இதை தொடர்ந்து பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி கட்சியினர் மனுத்தாக்கல் செய்ய போதுமான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். பா.ஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. ஆனால் இந்தியா கூட்டணியில் முழுமையான தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை. இதனால் கூட்டணிக்குள் குழப்பம் நீடிக்கிறது.
இந்தியா கூட்டணியில் உள்ள சிபிஐ(எம்எல்) லிபரேஷன் கட்சி 20 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. தற்போது பீகார் சட்டப்பேரவையில் உள்ள 12 எம்எல்ஏக்களை அந்த கட்சி மீண்டும் நிறுத்தி உள்ளது. இந்த நிலையில் பீகார் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அறிவித்து உள்ளது.
மேலும் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் 6 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தொகுதிகளில் மனுத்தாக்கல் செய்ய திங்கட்கிழமை கடைசி நாள் ஆகும். இதற்கிடையே பீகாரில் வாக்குப்பதிவு நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.