பீகார் வாக்காளர் பட்டியலில் 14.35 லட்சம் இரட்டை வாக்காளர்களும் 1.32 லட்சம் போலி வாக்காளர்களும் சேர்ப்பு : ஆய்வில் முறைகேடுகள் அம்பலம்
பாட்னா : பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து முறைகேடுகள் அம்பலம் ஆகி வருகிறது. பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6ம் தேதியும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11ம் தேதியும் நடைபெறுகிறது. இதற்காக கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில், உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்கள், இருவேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
பீகார் வாக்காளர் பட்டியலில் 68.6 லட்சம் பேரின் பெயர் நீக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட பீகாரின் இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7.42 கோடி ஆகும். இந்த நிலையில், பீகார் வாக்காளர் பட்டியலில் 14.35 லட்சம் இரட்டை வாக்காளர்களும் 1.32 லட்சம் போலி வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. செப்.30-ல் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலை, ரிப்போர்டர்ஸ் கலெக்டிவ் என்கிற அமைப்பு ஆய்வு நடத்தியதில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது அம்பலம் ஆகி உள்ளது. வயது மற்றும் விலாசத்தில் சிறிய மாற்றங்களை செய்து 14.35 லட்சம் பேர் 2 இடங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே பீகார் வாக்காளர் பட்டியல் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வருகிறது.