பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு: ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை குடியுரிமை ஆதாரமாக ஏற்க அறிவுரை: தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்
* குடியுரிமையை நிரூபிக்க கோரும் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் விதம், அதற்கான குறுகிய காலஅவகாசம் ஆகியவை குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
* வெறும் 30 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், யாருக்கும் பிரச்னை ஏற்படாமல் தீவிர திருத்த பணிகளை முடிக்க முடியுமா என்பது சந்தேகத்தை எழுப்புவதாக நீதிபதிகள் கூறி உள்ளனர்.
* ஆதார், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையையும் உரிய ஆவணமாக ஏற்றுக் கொள்ள தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
புதுடெல்லி: பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதில் குடியுரிமையை நிரூபிப்பதற்கான 11 ஆவணங்களில் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களையும் ஏற்க அறிவுறுத்தியுள்ளது. மேலும், குறுகிய கால அவகாசத்தில் தீவிர திருத்த பணிகளை செய்வதற்கான காரணம் உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
பீகாரில் வரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், கடந்த மாதம் இறுதியில் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளை தொடங்கியது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, தகுதியான வாக்காளர்களை சேர்ப்பதே தீவிர திருத்தத்தின் நோக்கம் என தலைமை தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
இதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 7.9 கோடி வாக்காளர்களும் அவர்களின் குடியுரிமையை நிரூபிக்க வேண்டியது அவசியமாகி உள்ளது. 2003ல் ஏற்கனவே செய்யப்பட்ட தீவிர திருத்தத்தின் படி தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாக வைத்து தற்போதைய தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, 2003 வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள சுமார் 4.5 கோடி பேர் எந்த ஆவணத்தையும் தரத் தேவையில்லை. மீதமுள்ளவர்கள் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஒன்றை ஆதாரமாக வழங்கி, கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும்.
வரும் 25ம் தேதிக்குள் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து தர வேண்டுமெனவும் அதன் அடிப்படையில் அடுத்த ஓரிரு மாதங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.தேர்தல் நெருங்கும் நிலையில், மிகக் குறுகிய காலக்கெடுவில் தேர்தல் ஆணையம் நடத்தும் இந்த தீவிர திருத்தத்தால் தகுதியான பல வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தொடரப்பட்டன. இந்த மனுக்கள், நீதிபதிகள் சுதான்சு துலியா மற்றும் ஜோய்மாலியா பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், ‘‘வாக்காளர் பட்டியலை 2 விதமாக திருத்த முடியும். ஒன்று தீவிர திருத்தம், மற்றொன்று சுருக்கமான திருத்தம்.
தற்பொழுது தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவது வாக்காளர் பட்டியலை தீவிர திருத்தும் பணி. இதில் வாக்காளர் பட்டியலில் இருக்கும் அத்தனை பேரும் தங்களது ஆவணங்களை கொடுத்து அதை மீண்டும் பதிவு செய்ய வேண்டிய தேவை உள்ளது. இதன் மூலம் சுமார் 7.9 கோடி மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். கடந்த 2003ம் ஆண்டுக்குப் பிறகு 10 தேர்தல்கள் பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்து விட்டது.
அப்படி இருக்கும் நிலையில் தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் போது அவசர அவசரமாக இதை செய்ய வேண்டிய தேவை, அதற்கான அவசியம் என்ன? மேலும், ஆதார் அடையாள அட்டையை ஆவணமாக எடுத்துக் கொள்ள முடியாது என தலைமை தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. இது தலைமை தேர்தல் ஆணையத்தின் அப்பட்டமான தன்னிச்சையான செயல்பாடு. இது மட்டுமில்லாமல் ஒருவர் இந்திய நாட்டின் குடிமகனா இல்லையா என்பதை சரி பார்க்க வேண்டிய வேலை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரக்கூடியது. அதை செய்வதன் மூலம் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டு இருக்கிறது’’ என கடும் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘அரசியல் அமைப்பின் கீழ் இத்தகைய பணிகளை மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது. கடந்த 2003ம் ஆண்டு தேர்தல் ஆணையம் அந்த தேதியை நிர்ணயித்தார்கள். தற்போது அதே மாதிரியான ஒரு தேதியை அவர்கள் நிர்ணயம் செய்து இருக்கிறார்கள்.
அதற்கான தரவுகளையும் அவர்கள் கொடுத்துள்ளார்கள். மனு தாக்கல் செய்திருக்கக்கூடிய நீங்கள் யாரும் தேர்தல் ஆணையத்தின் இந்த அதிகாரத்தை எதிர்க்கவில்லை. மாறாக அது செய்யப்படும் காலத்தை தான் எதிர்க்கிறீர்கள் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஆதார் அட்டையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள மறுப்பது தானே உங்களது முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது. அது தானே உண்மை’’ என்று கேள்வியெழுப்பினர்.
அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘‘ஆனால் இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 7.5 கோடி வாக்காளர்களும் சிக்கலில் மாட்டி உள்ளனர் என்பதை ஆணையம் புரிந்து கொள்ளவில்லை. ஏனென்றால் கடந்த ஜூன் மாதமே பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டது. அப்படி இருக்கும்போது மீண்டும் வாக்காளர் பட்டியலில் கை வைப்பது தான் சந்தேகத்தை எழுப்புகிறது’’ என்று பதிலளித்தார்.
அதற்கு நீதிபதிகள், ‘‘குடியுரிமை இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கக் கூடாது என்பதற்காக இப்படியான நடைமுறைகளை மேற்கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஜனநாயக நாட்டில் வாக்களிக்கும் உரிமை என்பது முக்கியமான உரிமை. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்வதை நாங்கள் தடுக்க முடியாது. அதே நேரத்தில் அவர்கள் செய்யக் கூடாத விஷயங்களை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என்றனர்.
மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரான கபில் சிபில், ‘‘இந்தியாவில் குடியுரிமைச் சட்டம், ஒன்றிய அரசுக்கு தான் அதிகாரம் வழங்கியிருக்கிறதே தவிர தேர்தல் ஆணையத்துக்கு அல்ல. ஒருவர் இந்திய குடிமகனா இல்லையா என்பதை தேர்தல் ஆணையம் எப்படி சொல்ல முடியும்? அவர்கள் குடிமக்கள் என்பதால் தான் அவர்களுக்கு அரசு ஆவணங்களை வழங்கி இருக்கிறது. அப்படி வழங்கப்பட்ட ஆவணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் எனக்கூறி அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது என்பது ஒட்டுமொத்தமாக அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாகத்தான் இருக்கிறது. என்னை இந்திய குடிமகன் இல்லை என்று தேர்தல் ஆணையம் எப்படி கூற முடியும்?’’ என கேட்டார்.
இதற்கு நீதிபதிகள், ‘‘இந்திய குடிமக்களை தவிர வேறு யாரும் இந்திய தேர்தல்களில் வாக்களிக்க கூடாது. அதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்பதை சட்டம் சொல்கிறது. அப்படி என்றால் அதை சரி பார்க்க வேண்டிய வேலை தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது தானே?’’ என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், ‘‘ பீகார் மாநிலத்தை பொறுத்தவரை ஒரு கோடிக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் எப்படி தங்களது ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும்’’ என்று கேட்டனர். இதற்கு நீதிபதிகள், ‘‘இந்த பணிகளை நடத்தும் கால நேரத்தை எதிர்த்தரப்பினர் சந்தேகிக்கின்றனர். அதற்கு உங்கள் பதில் என்ன?’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘அரசியல் சாசன பிரிவு 324ன் கீழ் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் செயல்படுகிறோம்.
ஒரே நபர் இரண்டு இடங்களில் வாக்களிப்பதை தடுப்பது, குடிமக்கள் அல்லாதோர் வாக்களிப்பதை தடுப்பது போன்ற பல பணிகள் எங்கள் முன்பு இருக்கின்றது. தற்பொழுது நாங்கள் மேற்கொண்டு வரும் இந்த வேலைகளில் மதம் சார்ந்தோ ஜாதி சார்ந்தோ எந்தவிதமான பாகுபாட்டையும் நாங்கள் காட்டவில்லை. தகுதி இல்லாதவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இதன் மூலம் தகுதி உள்ளவர்களுக்கு அவர்களது உரிமை நிலை நாட்டப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் 2 ஆண்டில் தொடங்க இருக்கும் நிலையில் தற்பொழுது இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் ஏன் மேற்கொண்டுள்ளது. மேலும் வெறும் முப்பது நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் பலரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் கேட்கும் ஆவணங்களை எங்களாலே கூட உடனடியாக தர முடியாது.
உங்களது முயற்சியையும் நம்பகத்தன்மையையும் நாங்கள் சந்தேகிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் யாருக்கும் பிரச்னை ஏற்படாமல் இந்த வேலையை முடிப்பீர்களா என்ற சந்தேகம் எழுகிறது’’ என கூறினர். அதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர்கள், ‘‘வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்படாது’’ என உறுதியளித்தார்.
இதனை அடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள், அதை பயன்படுத்துவதற்கான நடைமுறை மற்றும் குறுகிய காலக்கெடு ஆகிய இந்த மூன்று விஷயங்களை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். எனவே இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை என்பது தேவைப்படுகிறது. எனவே ஜூலை 28ம் தேதி உரிய அமர்வு முன்பு இந்த வழக்கு பட்டியலிடப்படும். ஒரு வார காலத்திற்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் விடுக்கிறோம்.
மேலும், பொதுமக்கள் வழங்குவதற்கான 11 ஆவணங்கள் பட்டியல் முழுமையானது அல்ல என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. எனவே, ஆதார், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களையும் ஏற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். இதில் முடிவெடுக்க வேண்டியது தலைமை தேர்தல் ஆணையம் தான்’’ என தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.