பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரம்.. மக்களவையில் விவாதிக்க முடியாது: கிரண் ரிஜிஜூ திட்டவட்டம்!
டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி மக்களவையில் விவாதிக்க முடியாது என கிரண் ரிஜிஜூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றம் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து மக்களவையில் விவாதம் நடைபெற்றது. ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் விளக்கமளித்தனர். ஆனால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தப்பட்டு வந்தாலும், ஒன்றிய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், மூன்றாவது வாரமாக பீகாா் விவகாரம் குறித்து நேற்றும் எதிரொலித்தது. அப்போது, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியதாவது; எந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்கும் ஒன்றிய அரசு தயாராக உள்ளது. அதேநேரம், எந்தவொரு விவாதமும் அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் மற்றும் அவை அலுவல்களுக்கான நடைமுறை, நடத்தை விதிமுறைகளுக்கு இணங்க இருக்க வேண்டும்.
பீகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த விவகாரத்தை எழுப்பி, கூட்டத் தொடரின் முதல் நாளில் இருந்தே எதிா்க்கட்சிகள் இடையூறு செய்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருவது நம் அனைவருக்கும் தெரியும். நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த முடியாது. அத்துடன், தோ்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.