பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 2வது நாளாக போராட்டம்..!!
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், கூட்டத்தொடரின் 2வது நாளான நேற்று இரு அவைகளும் தொடங்கியதும், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பீகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினா்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் பொதுச்செயலா் பிரியங்கா காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனா். ‘சிறப்பு தீவிர திருத்தம் - இந்தியா்களின் உரிமையைப் பறிக்கும் செயல்’ என்பது உள்ளிட்ட கண்டன வாசக அட்டைகளை அவா்கள் கைகளில் ஏந்தியும், ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினா். இந்த போராட்டத்தில் மக்களவை திமுக எம்.பி.க்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து ஈடுபட்டு இருக்கிறார்கள்.