பீகார் சட்டப்பேரவை தேர்தல் : இந்தியா கூட்டணி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக 35 வயதான தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு!!
பாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் மகாபந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி நவம்பர் 6ம் தேதி முதற்கட்ட தேர்தலில் 121 தொகுதிகளுக்கும், 11ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலில் 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், பா.ஜனதா அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் இடம் பெற்ற ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான இந்தியா கூட்டணி (மெகா கூட்டணி) , பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி ஆகியவற்றிற்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் ,லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளாராக அறிவித்தார். தேஜஸ்வி யாதவ் ஏற்கனவே பீகாரின் துணை முதல்வராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேஜஸ்வி யாதவ் முதலமைச்சராக வெற்றி பெற்றால் இந்தியாவின் இளம் முதலமைச்சர் என்ற பெயரை பெறுவார்.இதனிடையே நிதிஷ் குமார் தலைமையில் தேர்தலை சந்தித்தாலும் வெற்றிக்கு பின்பே முதலமைச்சரை தேர்வு செய்வோம் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா முன்பு கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.