பீகாரின் இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்-க்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
சென்னை: பீகாரின் இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்-க்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பீகாரில் புதுப்பிக்கப்பட்ட சமூக நீதி இயக்கத்தின் உந்து சக்தியாக நீங்கள் உருவெடுத்து, மில்லியன் கணக்கான மக்களிடையே நம்பிக்கையைத் தூண்டியுள்ளீர்கள் என தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
இன்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முக்கியத் தலைவரும், பீகாரின் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தனது 36வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பீகார் சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்டப் பிரச்சாரங்களுக்கு மத்தியில் அவரது பிறந்தநாள் வந்துள்ளதால், இந்த நிகழ்வு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேஜஸ்வி யாதவின் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "அன்புள்ள சகோதரர் தேஜஸ்வி யாதவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பீகாரில் புதுப்பிக்கப்பட்ட சமூகநீதி இயக்கத்தின் உந்து சக்தியாக நீங்கள் உருவெடுத்துள்ளீர்கள், இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் நம்பிக்கையைத் தூண்டியுள்ளீர்கள்.
உங்கள் தலைமையில் பீகார் ஒரு புதிய அத்தியாயத்தின் விளிம்பில் நிற்கும் வேளையில், சமத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் குறிக்கோள்களை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தக் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பாதையில் தொடர்ந்து செல்ல உங்களுக்கு வலிமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் தைரியம் கிடைக்க வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.