பீகார் சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடப்போவது இல்லை :ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு!!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடப்போவது இல்லை என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். பீகார் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கிறது. 14-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த நிலையில், ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “பீகார் சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடப்போவது இல்லை. கட்சி நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்தது, அதற்கு நான் கட்டுப்பட்டுள்ளேன்.
ராகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவுக்கு எதிராக வேறு ஒரு வேட்பாளரை அறிவித்துள்ளோம். என் போட்டி, கட்சியின் அமைப்பு செயல்பாடுகளில் என் கவனத்தைத் திசைதிருப்பும் என்பதால், இந்த முடிவு சரியானது. இம்முடிவு என் அரசியல் பயணத்தின் நன்மைக்காக எடுக்கப்பட்டது. இருப்பினும், ஜன் சுராஜ் கட்சி மூலம் மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்வேன்.
முதலமைச்சர் நிதிஷ் குமார் கட்சியின் எதிர்காலம் மோசமடைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயமாக வெளியேறும் பாதையில் உள்ளது. நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக வரமாட்டார். ஜன் சுராஜ் கட்சி, பீகாரின் 243 தொகுதிகளில் சுமார் 150 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்," என்று கூறினார்.