பீகார் சட்டம் - ஒழுங்கு விவகாரம்; பாஜக கூட்டணியில் இருந்து சிராக் விலகலா?: தனித்து போட்டி தகவலால் பரபரப்பு
பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக வெளியான செய்திகளை வெறும் வதந்தி என மறுத்துள்ள ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான், பிரதமர் மோடி இருக்கும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகமாட்டேன் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ் பஸ்வான்) கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி 243 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக தொலைக்காட்சியில் தொடர்ந்து செய்திகள் பரவின.
இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாட்னா திரும்பிய ஒன்றிய அமைச்சரான சிராக் பஸ்வான், ‘ஒருபோதும் நான் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கூறவில்லை. 243 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாகவும் பேட்டி அளிக்கவில்லை. அந்த செய்திகள் அனைத்தும் வெறும் வதந்திகளே. பிரதமர் மோடி இருக்கும் வரை, கூட்டணியில் இருந்து விலகல் என்ற பேச்சுக்கே இடமில்லை. சிலர் எங்களை கூட்டணியிலிருந்து பிரித்துக் காட்ட முயற்சிக்கின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒற்றுமையாக இருக்கும் வரை, தங்களால் ஆட்சிக்கு வர முடியாது என்பது எதிர்க்கட்சிகளுக்குத் தெரியும். அதனால்தான், நான் கூறாத ஒன்றை திரித்து பரப்புகிறார்கள்’ என்று கடுமையாகச் சாடினார்.
சமீபத்தில், பீகாரின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து சிராக் பஸ்வான் எழுப்பிய கேள்விகள் பாஜகவின் முக்கியத் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் கூறும்போது, ‘குற்றங்கள் அதிகரித்து வரும் மாநில அரசை ஆதரிக்க வேண்டியிருப்பதில் எனக்கு வருத்தமிருக்கிறது’ என்றார். இதனைத் தொடர்ந்தே, கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவின. அப்போது அவரிடம் தொகுதிப் பங்கீடு குறித்துக் கேட்டபோது, ‘இதுவரை கூட்டணிக்குள் எந்தப் பேச்சும் நடைபெறவில்லை. அதுகுறித்த முடிவு கூட்டணிக்குள்ளேயே எடுக்கப்படும்’ என்று அவர் பதிலளித்தார். பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அரசுக்கு லோக் ஜனசக்தி (ராம் விலாஸ் பஸ்வான்) கட்சி ஆதரவளித்து வரும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் 243 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அக்கட்சி அறிவித்திருப்பதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.