பரபரப்பான பீகார் தேர்தல்.. ஒரே மாதத்தில் பீகாருக்கு மூன்று முறை சென்ற பிரதமர் மோடி; பெண்கள், இளைஞர்களின் வாக்குகளை குறிவைத்த பாஜக!
பீகார்: அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்துக்கு பிரதமர் மோடி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான திட்டங்களை தொடங்கி வைத்திருப்பது கடும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது. ஒவ்வொரு மாநிலமும் சட்டப்பேரவைத் தேர்தல் சந்திக்கும் போது அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருவது வழக்கமாகி உள்ளது.
அந்த வகையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆளும் பீகாருக்கும் 3 முறை சென்ற பிரதமர் மோடி, சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான திட்டங்களை தொடங்கி வைத்தார். ஆகஸ்ட் 22ம் தேதி பீகார் மாநிலம் கயாவில் நடந்த விழாவில் கங்கை நதியின் மேல் ரூ.1870 கோடியில் பாலம் கட்டுதல் உட்பட, ரூ.13,000 கோடியில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கயாவில் ரூ.6,880 கோடி செலவில் விரிவுபடுத்தப்பட்ட பக்சர் அனல் மின்நிலையம் உள்ளிட்ட பல திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். செப்.15ம் தேதி பீகாரில் ரூ.36,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பஹல்பூர் மாவட்டத்தில் ரூ.25,000 கோடி மதிப்பில் புதிய அனல்மின் நிலைய கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் தொடங்கி வைத்த பீகார் மாநில அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான வருடாந்திர ஆடை உதவி திட்டத்தின் மூலம் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்பட்டது. பெண்கள் சுய தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தையும் செப்டம்பர் 28ல் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அடுத்த ஒரு வாரத்திலேயே இத்திட்டத்தின் கீழ் மேலும் 46 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட்டது.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு 2 நாட்கள் முன்னதாக கூட பீகாரில் பட்டதாரி இளைஞர்களுக்கு தலா ரூ.1,000 வழங்குதல் உட்பட ரூ.62,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பெண்கள், இளைஞர்களின் வாக்குகளை குறிவைத்து ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி திட்டங்களை தொடங்கி வைத்திருப்பதை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சிகள், எப்படியாவது பீகாரில் வெற்றி பெற்றுவிட பாஜக துடிப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளன.