பீகார் சட்டமன்ற தேர்தல்.. நவம்பர் 14ம் தேதி பீகாரில் புதிய அரசு அமையும்: தேஜஸ்வி நம்பிக்கை!!
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று இந்திய கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி கேட்டுக்கொண்டுள்ளார். பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், நவம்பர் 14ம் தேதி பீகாரில் புதிய அரசு அமையும் என்று தேஜஸ்வி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாட்னாவில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, பீகார் மக்கள் தங்கள் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் மனதில் கொண்டு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும். வேலைவாய்ப்பு, கல்வி, நல்ல சுகாதாரத்திற்காக வாக்களியுங்கள். தேர்தலில் நாங்கள் பெரும் வெற்றி பெறுவோம். பீகார் வெற்றி பெறப் போகிறது. வரும் நவம்பர் 14ம் தேதி பீகாரில் புதிய அரசு அமையும் என அவர் கூறினார்.