பீகார் தேர்தலில் தனித்து போட்டியிட அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் முடிவு..!!
பாட்னா: பீகார் தேர்தலில் தனித்து போட்டியிட அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, பீகாரில் இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆர்.ஜே.டி. கட்சிக்கு 3 முறை கடிதம் எழுதியபோதிலும், அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை என்று அவர் கூறினார். இந்நிலையில், பீகாரில் ‘சீமாஞ்சல் நியாய யாத்திரை’ என்ற பெயரில் 3 நாள் பிரசாரத்தை ஒவைசி நேற்று தொடங்கினார். இதனால் ஒவைசி தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பீகாரில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஒவைசி கட்சி 25 இடங்களில் தனித்து போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. ஒவைசி கட்சியை சேர்த்தால், வரும் தேர்தலை இந்து - முஸ்லிம்கள் இடையிலான போட்டியாக பாஜக மாற்றிவிட வாய்ப்பு உள்ளதால், கூட்டணியில் சேர்க்க எங்களுக்கு தயக்கம் இருப்பதாக இந்தியா கூட்டணி கட்சியினர் தெரிவித்தனர்.பீகாரில் வரும் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ் குமார் முதலமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.