பிகில் திரைப்படத்தின் கதை தொடர்பான வழக்கு: இயக்குனர் அட்லி பதில்தர ஐகோர்ட் உத்தரவு
இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, இயக்குனர் அட்லி, ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் அதன் செயல் இயக்குனர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு மனுதாரர் தலா ஒரு லட்சம் ரூபாய் வழக்குச் செலவாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்க அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின்படி, குறிப்பிட்ட காலத்தில் வழக்குச் செலவுத்தொகை செலுத்தப்படாததால், அம்ஜத் மீரான் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அம்ஜத் மீரான் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல் முறையீடு செய்வதற்கான கால அவகாசத்தை தாண்டி 73 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததால் தாமதத்தை ஏற்றுக் கொள்ளவும் மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர், இயக்குனர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் இந்த வழக்கில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.