பூடானில் இருந்து கொண்டு வரப்பட்ட நடிகர் துல்கர் சல்மானின் மேலும் ஒரு கார் பறிமுதல்
திருவனந்தபுரம்: பூடானிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் புகாரில் நடிகர் துல்கர் சல்மானின் மேலும் ஒரு சொகுசு காரை சுங்கத்துறை நேற்று கைப்பற்றியது. பூடான் ராணுவம் ஏலத்தில் விட்ட சொகுசு வாகனங்களை சட்டவிரோதமாக இந்தியாவில் மறுபதிவு செய்து விற்பனை செய்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்காலைக்கல் உள்பட பலரது வீடுகளில் சுங்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.
இதில் நடிகர் துல்கர் சல்மானிடமிருந்து தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட லேண்ட்ரோவர் கார் உள்பட 2 கார்களும், அமித் சக்காலக்கல்லிடமிருந்து 6 கார்களும் கைப்பற்றப்பட்டன. இது தவிர கேரளா முழுவதும் இருந்து 38 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. துல்கர் சல்மானின் மேலும் 2 கார்கள் குறித்து சுங்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் சுங்கத்துறை தேடி வந்த நிசான் பேட்ரோல் என்ற சொகுசு கார் கொச்சியில் துல்கர் சல்மானின் நண்பரின் அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று சுங்கத்துறை அந்தக் காரை கைப்பற்றியது. இது தவிர இவரது மேலும் ஒரு கார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
* லக்கி பாஸ்கர் படத்தில் வந்த கார்
நடிகர் துல்கர் சல்மான் பூடானிலிருந்து கொண்டுவரப்பட்ட 4 கார்களை பயன்படுத்தி வருவதாக சுங்கத்துறைக்கு ஏற்கனவே தகவல் கிடைத்திருந்தது. இதில் 2 கார்கள் ஏற்கனவே கைப்பற்றப்பட்டது. மேலும் 2 கார்கள் குறித்து சுங்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இதில் கொச்சியில் அவரது உறவினர் தங்கியுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு கார் இருப்பதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அந்தக் காரை சுங்கத்துறை கைப்பற்றியது. சொகுசு காரான இந்த நிசான் பேட்ரோல் வாகனம் துல்கர் சல்மான் சமீபத்தில் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான லக்கி பாஸ்கர் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.