சட்டீஸ்கர் மதுபான கொள்கை ஊழல் வழக்கு; முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மகன் சைதன்யா கைது
ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் மதுபான கொள்கை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வரான பூபேஷ் பாேகலின் மகன் சைதன்யா பாேகல் பணமோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்ததை தொடர்ந்து தந்தை -மகன் இருவரும் தங்கி இருக்கும் துர்க் மாவட்டத்தின் பிலாய் நகரில் உள்ள பாகலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதன் பின்னர் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சைதன்யா பாேகல் கைது செய்யப்பட்டார். சோதனைகளின்போது சைதன்யா பாேகல் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று அவர் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமலாக்கத்துறை சோதனையையொட்டி பூபேஷ் பாேகல் வீட்டிற்கு முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த சோதனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பூபேஷ் பாேகல், ‘‘ராய்கர் மாவட்டத்தில் தாம்னார் தாலுகாவில் அதானி குழுமத்தின் நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்காக மரங்கள் வெட்டப்படுவது தொடர்பான பிரச்னையை சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று(நேற்று) எழுப்ப திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தங்களது எஜமானரை மகிழ்விப்பதற்காக மோடியும், ஷாவும் அமலாக்கத்துறையை எனது வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்” என்றார். கைது விவகாரத்தை சட்டீஸ்கர் சட்டப்பேரவையில் எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சைதன்யாவுக்கு 5 நாள் காவல்
மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் பூபேஷ் பாேகலின் மகன் சைதன்யா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.