தேனி லோயர்கேம்பில் உள்ள பண்ணை வீட்டில் பவதாரணியின் உடல் நல்லடக்கம்: ஓபிஎஸ், பாரதிராஜா உட்பட பிரபலங்கள் அஞ்சலி
பின்னர், நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரான தேனி மாவட்டம், கூடலூர் அருகே லோயர்கேம்ப் கொண்டு செல்லப்பட்டது. நேற்று காலை 11 மணிக்கு லோயர்கேம்ப் குருவனூற்று பாலம், முல்லைப் பெரியாற்றங்கரையில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீடான ஸ்ரீ குரு கிருபா வேத பாடசாலைக்கு உடல் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து சகோதரர் கார்த்திக் ராஜா குடும்பத்தினர் வந்தனர். இதையடுத்து இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் மகன்களான வெங்கட் பிரபு, பிரேம்ஜி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, திரைப்பட நடிகர் கிருஷ்ணா, ட்ரம்ஸ் சிவமணி ஆகியோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா பவதாரணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த இளையராஜா, மதுரை ஏர்போர்ட்டில் இருந்து காரில் பகல் 2 மணிக்கு லோயர்கேம்ப் பங்களாவுக்கு வந்தார். வந்த உடன் தனது மகளின் உடலுக்கு கண்ணீரோடு அஞ்சலி செலுத்தினார். மகளின் உடலை வைத்த கண் வாங்காமல் சிலை போல நின்று, அவர் பார்வையிட்டது அனைவரது கண்களையும் குளமாக்கியது.
இதையடுத்து, தேனி திமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்கள் கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ, தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்பி ரவீந்திரநாத் குமார் ஆகியோர் பவதாரணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். காலை முதல் மதியம் வரை பிரபலங்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பவதாரணியின் உடல் நேற்று மாலை பங்களாவின் உட்புறம் தோட்டப்பகுதியில் உள்ள இளையராஜாவின் தாயார் சின்னத்தாயம்மாளின் சமாதிக்கும், மனைவி ஜீவாவின் சமாதிக்கும் நடுவில் அடக்கம் செய்யப்பட்டது.