தமிழ்நாட்டை போல பஞ்சாபிலும் காலை உணவு திட்டத்தை தொடங்க விரும்புகிறேன் :பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உரை
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். நகரப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் வகையில், இன்று சென்னை, மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுடன் உணவு அருந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதேபோல் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து மாணவர்களுக்கு உணவுகளை பரிமாறி அவர்களுடன் காலை உணவு உட்கொண்டார்.
இந்த விழாவில் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்,"பஞ்சாப் மாநிலத்தின் ஒவ்வொரு இடத்திலும் தென் மாநில உணவுகள் நிறைந்திருக்கின்றன. அதேபோல் பஞ்சாப் மாநில உணவுகள் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் விற்கப்படுவது சிறப்பான விஷயம்; தென்மாநில உணவுகள்தான் தேசிய உணவுகள்போல் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது சிறப்பான திட்டம். காலை உணவு திட்டம் போல் ஒரு சிறந்த திட்டம் எதுவும் இல்லை. மாணவர்களின் உடல்நிலையை முன்னேற்ற காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்துவது நல்ல விஷயம். மாணவர்கள் வயிற்றுப் பசியோடு இருந்தால் கல்வியில் கவனம் செலுத்த முடியாது.
இத்திட்டம் மாணவர்களின் வயிற்றுப் பசியையும் போக்கி, அறிவுப் பசியையும் போக்குகிறது. காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் வருகைப்பதிவு அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தால் பள்ளிகளில் இடைநிற்றல் குறைந்துள்ளது. காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழாவில் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன். தமிழ்நாட்டை போல பஞ்சாபிலும் காலை உணவு திட்டத்தை தொடங்க விரும்புகிறேன். 20 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது மிகப்பெரிய சாதனை. காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசை பாராட்டுகிறேன். ஆம் ஆத்மி கட்சி ஏழை மக்களுக்கான கட்சி. கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு பஞ்சாப் அரசும் முக்கியத்துவம் அளித்து வருகிறது."இவ்வாறு தெரிவித்தார்.