பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆர்.சி.பி அறிவிப்பு
பெங்களூரு: பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஆர்.சி.பி அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி முதல் முறையாக கோப்பை வென்று மகுடம் சூடியது.மறுநாள் பெங்களூரு விதான சவுதாவில் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பாராட்டு விழாவும், சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அப்போது மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, இச்சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்திருந்தது.பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அறிவித்த இழப்பீடு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஆர்.சி.பி நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.