ஓசூரில் இருந்து 19 கி.மீ. தூரத்தில் அமைகிறது; ரூ.1650 கோடியில் பெங்களூருவில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல்லில் ஆர்பிசி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து கொண்டாட்டங்கள் நடந்தபோது 10க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். 35 பேர் அமரக்கூடிய ஸ்டேடியத்தில் பல லட்சம் பேர் குவிந்ததால் ஏற்பட்ட நெரிசல் தான் இதற்கு காரணம். இதைத்தொடர்ந்து சின்னசாமி ஸ்டேடியத்தை இடிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி தற்போது 1650 கோடி ரூபாய் செலவில் பெங்களூர் புறநகர் பகுதியான பொம்மசந்திராவில் சூர்யா நகரில் புதிய மைதானம் அமைக்க அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த மைதானத்தில் சுமார் 80 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாவது கிரிக்கெட் மைதானம் என்ற பெயரை இது பெற உள்ளது. பொம்மசந்திராவில் அமைக்கப்படும் இந்த புதிய மைதானம் பெங்களூர் கிரிக்கெட் மைதானம் என்று பெயர் பெற்றிருந்தாலும், பெங்களூருவில் இருந்து மைதானத்திற்கு செல்லும் நேரத்தைவிட தமிழகத்தின் ஓசூரில் இருந்து விரைவாக சென்றுவிட முடியும். ஓசூரில் இருந்து சுமார் 19 கிலோமீட்டர் தூரத்தில் இந்த பொம்மசந்திரா கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது. இதே நேரத்தில் பெங்களூருவில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரமாகும். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 80 கி.மீ. பயணிக்க வேண்டி இருக்கும்.
புதிய கிரிக்கெட் மைதானம் கட்ட கர்நாடக வீட்டுவசதி வாரியத்தின் (கேஎச்பி) முன்மொழிவுக்கு பெங்களூரு முதல்வர் சித்தராமையா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மைதானம் கட்ட சுமார் 2 ஆண்டுகள் ஆகும், என்பதால் ஐபிஎல் 2026 இல் ஆர்சிபியின் சொந்த மைதானப் போட்டிகள் எங்கு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.