வங்கப் போராளியின் பேரன் கொடுத்த புகாரில் பாலிவுட் இயக்குனர் மீது வழக்கு: சர்ச்சையில் சிக்கிய ‘தி பெங்கால் பைல்ஸ்’
கொல்கத்தா: வரலாற்று நாயகனின் அடையாளத்தை தவறாக சித்தரித்து அவமதித்ததாகக் கூறி, திரைப்பட இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி மீது அவரது பேரன் அளித்த புகாரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த வங்கப் போராளி கோபால் முகர்ஜி என்பவர், ‘கோபால் பதா’ என்று பரவலாக அறியப்பட்டவர். இவர் 1946ம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரங்களைக் கட்டுப்படுத்துவதிலும், இந்துக்களைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றியவர் ஆவர்.
மல்யுத்த வீரராகவும், அனுசீலன் சமிதியின் முக்கிய உறுப்பினராகவும் இருந்துள்ளார். அவரது சித்தாந்தம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடன் ஒத்துப்போனதுடன், முக்கிய சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், பாலிவுட் திரைப்பட இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கும் ‘தி பெங்கால் பைல்ஸ்’ திரைப்படத்தின் முன்னோட்டத்தில், கோபால் முகர்ஜியின் கதாபாத்திரம் ‘ஏக் தா கஷாய் கோபால் பதா’ என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அவரது பேரன் சாந்தனு முகர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது தாத்தா இறைச்சி வெட்டுபவர் இல்லை என்றும், அவரை அவமதிக்கும் வகையில் ‘கஷாய்’ (இறைச்சி வெட்டுபவர்) மற்றும் ‘பதா’ (ஆடு) என்ற பெயர்களால் சித்தரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி மீது உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் விவேக் அக்னிஹோத்ரி மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வரலாற்று நாயகனான தனது தாத்தா குறித்து தவறாக சித்தரிதற்காக விவேக் அக்னிஹோத்ரி மன்னிப்பு கோர வேண்டும் எனக் கோரி, அவருக்கு எதிராக நோட்டீசும் அனுப்பியுள்ளார். தனது தாத்தா குறித்த தவறான தகவல் எங்கிருந்து கிடைத்தது என கேள்வி எழுப்பியுள்ள அவர், சினிமா படக்குழு தங்களை எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார். விவேக் அக்னிஹோத்ரி மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ள விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.