பெல்ஜியம் நீதிமன்றத்தில் சோக்சியின் ஜாமீன் மீண்டும் நிராகரிப்பு
புதுடெல்லி: வங்கிக்கடன் மோசடி தொடர்பாக இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான தொழிலதிபர் மெகுல் சோக்சியின் ஜாமீன் மனு பெல்ஜியம் நீதிமன்றத்தில் மீண்டும் நிராகரிக்கப்பட்டது. குஜராத் தொழிலதிபரும், வைர வியாபாரியுமான மெகுல் சோக்சியும் அவரது மருமகன் நீரவ் மோடியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் கடந்த 2018ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பினார். முதலில் ஆன்டிகுவா சென்ற மெகுல் சோக்சி, 2021ல் டொமினிகன் குடியரசு நாட்டுக்கு சென்று, பின்னர் பெல்ஜியத்தில் தஞ்சமடைந்தார்.
சிபிஐ அனுப்பிய நாடு கடத்தல் கோரிக்கையின் அடிப்படையில் மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். தனக்கு ஜாமீன் கோரி சோக்சி தொடர்ந்த வழக்க கேசேஷன் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில், பெல்ஜியம் மேல்முறையீடு நீதிமன்றத்தில் கடந்த 22ம் தேதி மீண்டும் மனு செய்தார். ஜாமீன் கொடுத்தால் மீண்டும் வேறு நாட்டிற்கு தப்பிப்பார் என சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் மேல்முறையீடு நீதிமன்றத்திலும் சோக்சியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது நாடு கடத்தல் வழக்கில் விரைவில் விசாரணை தொடங்கப்பட உள்ளது.