நடத்தையில் சந்தேகத்தால் பயங்கரம் தாமிரபரணியில் மூழ்கடித்து இளம்பெண் கொலை: கணவன் கைது
அம்பை: அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா (31). டிரைவர். இவரது மனைவி காவேரி (30). ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக செல்லையாவிற்கு மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் காவேரி கோபித்து கொண்டு முக்கூடலில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று முக்கூடலுக்கு சென்ற செல்லையா, மனைவியை சமாதானம் செய்து அழைத்து வந்தார். பின்னர் நேற்று மாலை இருவரும் அம்பை குருவனம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போதும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்லையா மனைவியை அடித்து உதைத்துள்ளார். அவரது தலையை பாறையில் இடித்தார். காவேரி அலறவே, ஆற்றில் அமுக்கி மூழ்கடித்துள்ளார்.
இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு காவேரி உயிரிழந்தார். அப்பகுதிக்கு மக்கள் வருவதற்குள் பைக்கை எடுத்து கொண்டு செல்லையா அம்பை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.பின்னர் தீயணைப்பு வீரர்கள் சென்று காவேரியின் சடலத்தை தேடினர். இரவானதால் தேடுதல் பணியை நிறுத்தினர். இன்று காலை மீண்டும் அவரது உடலை தேடுவதற்கு முடிவு செய்துள்ளனர். இதனிடையே போலீசார் செல்லையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.