அழகு மட்டும் அல்ல ஆரோக்கியமும் கொடுக்கும் பெடிக்யூர், மெனிக்யூர்!
பொதுவாக பத்தில் ஒரு பெண் தான் தன் கை கால்கள் ஆரோக்கியம், மற்றும் அழகிலும் அக்கறை செலுத்துவதாக குறிப்பிட்டிக்கிறார்கள் அழகியல் வல்லுனர்கள். உண்மையில் நமது கை, கால் பராமரிப்பு என்பது ஆடம்பரமாக இருப்பினும், அது உடல் ஆரோக்கியம், சீரான ரத்த ஓட்டம் மற்றும் நலம் தரும் நல்வழி களில் மிக முக்கியமான ஒன்று. “பெடிக்யூர்” மற்றும் “மெனிக்யூர்” என்பது வெறும் அழகு நோக்கமல்ல; நம் உடலை நன்கு சுத்தம் செய்து, ஆரோக்கியமயமாக வைத்திருக்க உதவுகின்ற நுட்பமான சிகிச்சைகள்.
பெடிக்யூர் (Pedicure) என்றால் என்ன?
லத்தீன் மொழியான “pedi” என்றால் கால், “cure” என்றால் சிகிச்சை.அதாவது கால்களைப் பராமரிக்கும் சிகிச்சைதான் பெடிக்யூர்.
மெனிக்யூர் (Manicure) என்றால் என்ன?
“Manus” என்ற லத்தீன் சொல்லுக்கு அர்த்தம் “கை”.கைகளின் நகங்கள், தோல், ஆகியவற்றை சுத்தப்படுத்தி, அழகுப்படுத்தும் செயல்முறையே மெனிக்யூர்.
பெடிக்யூர், மெனிக்யூர் - முக்கிய பயன்கள்:
முன்பு பெரும்பாலும் வீட்டுக்குள் பெண்கள் இருந்தனர். ஆனால் இன்றைய நிலை வேறு வீட்டிலேயே இருக்கும் பெண்ணாக இருப்பினும் குழந்தைகளை அழைத்து வருவது துவங்கி பொருட்கள் வாங்குவதற்குக் கூட பெண்கள் வெளியில் வந்தாக வேண்டிய சூழல் உள்ளது. இதில் துவைக்க, பாத்திரம் கழுவ, வீடு துடைக்க என ஈரத்திலேயே அதிக நேரம் செலவிடுவதும் பெண்களின் கைகள் மற்றும் கால்கள்தான். என்கையில் மிகச் சுலபமாக தொற்றுகள், சரும தோல் அரிப்புகள், பாத வெடிப்புகள், எரிச்சல் என அனைத்தும் வரும். இதனைத் தடுக்கும் எளிய மருத்துவ முறையும் இந்த பெடிக்யூர் , மெனிக்யூர்தான். அழுக்கு, இறந்த செல்கள், சருமத்துக்கு அடியில் தேங்கும் மாசுகள், பிசுக்குகள், நகங்களுக்கு இடையே சிக்கிக் கொள்ளும் அழுக்குகள் என போன்றவை நீங்க பெடிக்யூர், மெனிக்யூர் உதவும். சிலருக்கு பூஞ்சை தோற்றுகள், அதனால் அரிப்புகள், மேலும் பாத வலிகள், கை எலும்புகளில் வலிகள் கூட உருவாகும். அதற்கு மெனிக்யூர், பெடிக்யூரில் செய்யப்படும் மசாஜ்கள் பயன் தரும்.
மரபணு நரம்பியல் நலன்
உடலின் அனைத்தும் நரம்புகளும் இணையும் பகுதி கை, கால்கள்தான். அங்கே உள்ள புள்ளிகளில் மசாஜ் மூலம் அழுத்தம் கொடுக்கும்போது, நரம்பியல் சார்ந்த பிரச்னைகள் சரியாகி, சுறுசுறுப்பும், ரத்த ஓட்டமும் மேம்படுகிறது.இந்த வகையில் பெடிக்யூருடன் reflexology சிகிச்சையும் சேர்த்துப் பெருகையில் நன்மைகளை தரும்.
மன அமைதி
எண்ணெய் மசாஜ் மற்றும் எக்ஸ்ஃபோலியேஷன் முறைகள் மூலம், நரம்புகள் தளர்ந்து, மன அமைதி கிடைக்கிறது. தலைவலி, அழுத்தம், தூக்கமின்மை பிரச்னைகள் தீரும். குறிப்பாக அலுவலக வேலை, மென்பொருள் வேலை, டூவிலரிலேயே அதிகம் பயணிக்கும் வேலை, இவைகளுக்கும் நல்ல ரிலாக்ஸ் கிடைக்கும்.
அழகு & சரும ஆரோக்கியம்
நகங்களை வடிவமைத்து, பளபளப்பாக வைத்திருப்பது ஒரு தனி அழகு. குறிப்பாக பணியில், முக்கியமான சந்திப்புகளில் மற்றவர்களின் பார்வை முதலில் நம் கால்களிலும், தொடர்ந்து பேசுகையில் கைகளின் அசைவுகளிலும் தான் பதியும் அவற்றை சீராக வைத்திருப்பதும் ஒரு பெர்சனாலிட்டி மேம்பாடுதான்.
யாருக்கு இது அவசியம்?
வேலைப்பளு அதிகம் உள்ள பெண்கள், கூட்டுக் குடும்பத்தில் ஹவுஸ் வைஃப், கணினி வேலையில் உள்ள ஆண்கள், பெண்கள் என இருவருமே இதனை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகச் சுலபமாக தொற்றுகள், காயங்கள் உண்டாகும் அபாயம் உள்ளதால் அவர்களுக்கு இது மிக அவசியம்.
எவ்வளவு அடிக்கடி செய்யலாம்?
மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் போதும். அல்லது சரியாக 40-45 நாட்களுக்கு ஒருமுறை செய்துகொள்ளலாம். குளிர்காலத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும்.பகிரப்பட்ட கருவிகள் (blade, scissors) பயன்படுத்தும்போது அலர்ஜி வர வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட பார்லர்கள் சரியான முறையில் கருவிகளை சுத்தப் படுத்துகிறார்களா என்பதை கவனிக்கவும். சருமத்தில் காயங்கள் கட்டிகள் இருப்பின் மெனிக்யூர்/பெடிக்யூர் மருத்துவ ஆலோசனையில்லாமல் செய்வதைத் தவிர்க்கவும்.நீரிழிவு நோயாளிகள் கத்தி, நகங்களை தூய்மைப்படுத்தும் கருவிகளை பார்லர் பணியாளர்கள் பயன்படுத்தும் போது கவனத்துடன் செய்யும்படி வலியுறுத்துங்கள் (especially foot cuts).ஒருவேளை பார்லர்களில் பெடிக்யூர், மெனிக்யூருக்கான கட்டணம் அதிகம் என யோசித்தால் வீட்டிலேயே செய்து கொள்வதற்கான DIY
மெனிக்யூர் & பெடிக்யூர், இதோ,
தேவையான பொருட்கள் (Basic Kit):
நகக் கிளிப்பர் (Nail clipper)
நகத்துக்கான ஃபைல் (Nail file)
கியூட்டிக்கிள் க்ளீனர் (Cuticle pusher&remover)
கால் ஸ்கிரப்பர் (Foot scrub)
(மெனிக்யூர், பெடிக்யூர் கிட்கள் அமேசான், ஃபிலிப்கார்ட் உள்ளிட்டத் தளங்களிலேயே மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன)
மசாஜ் எண்ணெய் (Foot massage oil)
DIY மெனிக்யூர் (கை பராமரிப்பு):
கைகளை சுத்தம் செய்து மிதமான சுடுநீரில் வைக்கவும் (10-15 நிமிடம்) இதனால் தோல் மென்மையாகி, கியூட்டிக்கிள்கள் மிருதுவாகும். கைகளை மென்மையாக துடைத்து சுத்தம் செய்யவும்.நகங்களை சீராக வெட்டி, நக ஃபைல் கொண்டு தேய்த்து நல்ல வடிவம் கொடுக்கவும் (square/round)கியூட்டிகிள்களை (cuticles) மென்மையாக வெளியே தள்ளி அவற்றை நீக்கவும். நகமும், சதையும் ஒன்றிணையும் இடத்தில் வெள்ளை நிற ஜவ்வு போல் தென்படும்.பிறகு மசாஜ் ஆயில் கொண்டு நன்கு தேய்த்து மசாஜ் செய்து மீண்டும் வாஷ் செய்துகொள்ளவும். நகங்களுக்கு அடிப்படை பூச்சு (Base Coat) கொடுத்துவிட்டு விருப்பமான நெயில் பாலிஷ் கலர் பூசிக் கொள்ள மெனிக்யூர் நிறைவு.
DIY பெடிக்யூர் (கால் பராமரிப்பு)
மிதமான சுடு நீரில் பாதங்களை ஊற வைக்கவும் (15 நிமிடம்)சிறிது பின்க் சால்ட் அல்லது இந்து உப்பு சேர்க்கலாம். பாதங்களில் சுருங்கிய சருமத்தையும், இறந்த செல்களையும் ஸ்கிரப்பர் கொண்டு அழுத்தித் தேய்த்து நீங்கவும். கால்களில் இருக்கும் கருந்திட்டுகள், சருமக் கரைகளில் அதிக கவனம் செலுத்துவமும். அதே போல் மேற்புற கால்களில் வெயிலால் உண்டான கருமை மீதும் கவனம் செலுத்தவும். பின்னர் பாதங்களை நன்கு உலர்த்திக் கொள்ளவும்.நகங்களை வெட்டி, நக ஃபைல் கொண்டு சரியான வடிவம் கொடுக்கவும்.கியூட்டிக்கிள் எண்ணெய், தேங்காய் எண்ணெய், அல்லது ஆலிவ் எண்ணெய் ஊற்றி நக இடுக்குகளை சுத்தம் செய்யவும் கால்களுக்கான ஸ்கிரப் க்ரீம் அல்லது சர்க்கரையுடன் எண்ணெய் அல்லது தேன் கலந்து தேய்த்து மேற்கொண்டு கால்களை தேய்க்கவும். வேண்டுமானால் கால்களுக்கு கஸ்தூரி மஞ்சள் தயிர் பேக் போட்டுக்கொள்ளலாம்.
சிறப்புக் குறிப்புகள்
நீர் ஊற வைக்கும் போது உப்பு அல்லது எப்சோம் சால்ட் சேர்க்கலாம் - பாத நரம்புகளுக்கு நல்லது.பாதங்களை உருட்டி வலிகளுக்கு நிவாரணம் கொடுக்கும் பிளாஸ்டிக் பந்துகள் ரூ.30 முதல் கடைகளில் கிடைக்கும் அவற்றைப் பயன்படுத்தினால் கால் நரம்புப் புள்ளிகள் ஆரோக்கியம் பெறும். எப்போது நெயில் பாலிஷ் போட்டுக்கொண்டாலும் அடிப்படைப் பூச்சு அவசியம். தொடர்ந்து இரண்டு கோட்டிங் நெயில் பாலிஷ் கொடுக்க நீண்ட நாட்களுக்கு நெயில் பாலிஷ்கள் விரல்களில் நிற்கும்.
- ஷாலினி நியூட்டன்