வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று காலை 8.30 மணி அளவில் இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும். அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் நவம்பர் 17 மற்றும் 18ஆம் ஆகிய தேதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளைய தினம் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நவம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.