வங்ககடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் தகவல்
டெல்லி: தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடற்கரைகளுக்கு அப்பால் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடலில் காற்று சுழற்சி நிலவி வந்தது. இது இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுபெறும் என்றும் நாளை மறுநாள் அதிகாலை தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடற்கரைகளை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.