நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் வெள்ளப்பெருக்கு: சுருளி அருவியில் குளிக்க தடை
கம்பம்: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து சுருளி அருவியில் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே பிரசித்தி பெற்ற சுருளி அருவி உள்ளது. இங்கு பூதநாராயணர் கோயில், சுருளி வேலப்பர் கோயில் ஆகியவை உள்ளன. இது பிரபலமான சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும் இருந்து வருகிறது. பக்தர்கள் அருவியில் நீராடி பூத நாராயணரை வழிபடுவது வழக்கம். இதனால் வெளி மாவட்ட, வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் சுருளி அருவியில் குளிப்பதற்காக வந்து செல்கின்றனர். கடந்த சில மாதங்களாக அருவியில் நீர்வரத்து சீராக இருப்பதால் பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் யானைகள் நடமாட்டம் இருந்ததால், அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்த நிலையில் யானைகள் இடம்பெயர்ந்து சென்றதால் நேற்று பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நீர்பிடிப்புப் பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை மேகமலை வனப்பகுதி, தூவாணம் அணை, அரிசிப்பாறை, ஈத்தகாடு வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தடுப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் விழுகிறது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பயணிகள் குளிப்பதற்கு கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் தடை விதித்தனர். இதுகுறித்து கிழக்கு வனச்சரக ரேஞ்சர் பிச்சைமணி கூறுகையில், ``சுருளி அருவியில் அதிக நீர் வரத்து காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு நீர்வரத்து சீரடைந்ததும் மீண்டும் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்’’ என்றார்.