குளித்தலை பஸ் நிலையம் அருகே கூட்டம் கூட்டமாக அலையும் தெருநாய்கள்
*நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
குளித்தலை : குளித்தலை பஸ் நிலையம் அருகே கூட்டம் கூட்டமாக அலையும் தெருநாய்கள் நகராட்சி அதிகாரிகள் கட்டுப்படுத்தவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பகுதியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் முக்கிய பகுதியாக மேம்படுத்தப்பட்ட நகராட்சி பேருந்து நிலையம் உள்ளது.
இந்த பேருந்து நிலையத்தில் தினந்தோறும் திருச்சி, கரூர், மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்தும் தரகம்பட்டி மார்க்கெட்டில் இருந்தும் நாமக்கல், சேலம், பெரம்பலூர், முசிறி மார்க்கத்தில் இருந்தும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மினி பேருந்துகள் ஏராளமாக சென்றுவருகின்றன. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதி மக்கள் சொந்த வேலை காரணமாக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பஸ் நிலையத்தில் இருந்து காவேரி நகருக்கு செல்லும் வழியில் அனைத்து அரசு அலுவலகங்களும் தனியார் மருத்துவமனைகளும் வணிக நிறுவனங்கள் கடைகள் ஏராளமாக உள்ளன. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில் சமீப காலமாக குளித்தலை நகராட்சியில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலை கடந்து மக்களை அச்சுறுத்துகின்றன. ஒரு சில நேரங்களில் குழந்தைகள் பெரியவர்கள் தடுமாறி கீழே விழும் நிலையும ஏற்படுகிறது.
மேலும் தெரு நாய்கள் கடித்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் இருந்து பொதுமக்களை விடுபட நகராட்சி முழுவதும் சுற்றி திரியும்தெரு நாய்களை கட்டுப்படுத்தி அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.