கூடைப்பந்து விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பாஜ முதல்வருடன் பங்கேற்க ஆதவுக்கு ஒன்றிய உளவுத்துறை தடை: ஏமாற்றத்துடன் டெல்லி திரும்பினார்
சென்னை: கூடைப்பந்து விளையாட்டு போட்டி துவக்க விழாவில் பாஜ முதல்வருடன் பங்கேற்க ஆதவ் அர்ஜுனாவுக்கு ஒன்றிய உளவுத்துறை தடை விதித்ததால் அவர் ஏமாற்றத்துடன் டெல்லி திரும்பினார். கரூரில் கடந்த 27ம் தேதி நடிகர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தின்போது நடிகர் விஜய்யுடன் பஸ்சில் பயணம் செய்தது, அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா. இருவரும் சம்பவம் நடந்தவுடன் சென்னைக்கு வந்து விட்டனர். அதன்பின்னர் இருவரும் வெளியில் தலை காட்டாமல் இருந்தனர்.
இந்தநிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்னர் ஆதவ் அர்ஜுனா, திடீரென்று தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருடைய பங்களாவில் தங்கினார். அப்போது பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களை ஆதவ் அர்ஜுனா தனியாக சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகின. நேற்று காலையில் டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு ஆதவ் புறப்பட்டுச் சென்றார்.
அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கினார். டேராடூனில் கூடைப்பந்து விளையாட்டுப்ேபாட்டி தொடக்க விழா நேற்று மாலையில் நடப்பதாக இருந்தது. விழாவில் அம்மாநில முதல்வர் புஸ்கர் சிங் டாமி மற்றும் கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொள்தாகவும் இருந்தது. இந்தநிலையில், திடீரென்று ஒன்றிய உளவுத்துறை, உத்தரகாண்ட் மாநில உளவுத்துறைக்கு அவசர கடிதம் அனுப்பியது.
அதில் ஆதவ் அர்ஜுனா, 4 நாட்களுக்கு முன்னர் கலவரத்தை தூண்டும் விதமாக சமூக வலைதள பதிவு வெளியிட்டிருந்தார். இதுகுறித்து சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஏன் ஆதவ் அர்ஜுனாவை கைது செய்யவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். தேச பாதுகாப்புக்கு எதிராக பதிவு வெளியிட்டிருந்த ஆதவுடன் ஒரு மாநில முதல்வர் பங்கேற்றால் நன்றாக இருக்காது.
அவர் நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர். இதனால் அவரை விழாவுக்கு வரவேண்டாம் என்று போலீசார் தடுத்து, டெல்லிக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று கூறியிருந்தது. ஒன்றிய உளவுத்துறையின் உத்தரவையடுத்து, அம்மாநில உளவுத்துறை போலீசார் ஆதவ் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்று, நீங்கள் உடனடியாக டெல்லி செல்லுங்கள் என்று கூறிவிட்டனர். இதனால் அவர் நேற்று இரவு 7.20 மணிக்கு டெல்லி திரும்பினார். விழாவில் அவர் பங்கேற்கவில்லை. ஒன்றிய பாஜ அரசின் உளவுத்துறையின் திடீர் எச்சரிக்கையால், உத்தரகாண்ட் முதல்வர் புஸ்கர்சிங் டாமி பங்கேற்ற விழாவில் ஆதவ் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.