அடிப்படை தேவைகளுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.127.5 கோடி நிதியை விடுவித்தது ஒன்றிய அரசு
டெல்லி: அடிப்படை தேவைகளுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.127.5 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவித்தது. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாட்டுக்காக ரூ.127 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 2,901 கிராம பஞ்சாயத்துகள், 74 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 9 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு இந்த நிதி கிடைக்கும்.
தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15ஆவது நிதிக்குழு மானியமாக ரூ.127.58 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. ஒன்றிய அரசு நடப்பு (2025-26) நிதியாண்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15ஆவது நிதிக் குழுவின் மானியத்தை விடுத்திருக்கிறது. இதில், தமிழகத்துக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தின் முதல் தவணையாக ரூ.127.586 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த நிதி 2,901 தகுதியுடைய கிராமப் பஞ்சாயத்துகள், 74 தகுதியுடைய பஞ்சாயத்து வட்டாரப் பகுதிகள், 9 தகுதியுடைய மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
மேலும், 2024-25ஆம் நிதியாண்டிற்காக அசாம் மாநிலத்திற்கு ரூ.214.542 கோடியையும் மத்திய அரசு விடுவித்துள்ளது. பஞ்சாயத்து ராஜ் மற்றும் நீா்வள அமைச்சகங்களின் குடிநீா் மற்றும் துப்புரவு துறை மூலம் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்காக 15ஆவது நிதிக் குழுவின் மானியங்களை விடுவிக்க ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு பரிந்துரை செய்கிறது. அதன் பின்னா், நிதியமைச்சகத்தின் மூலம் நிதி விடுவிக்கப்படுகிறது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியங்கள், ஒரு நிதியாண்டில் 2 தவணைகளாக விடுவிக்க பரிந்துரைக்கப்பட்டு, விடுவிக்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்களை, ஊதியம் மற்றும் இதர செலவுகள் தவிர, அரசியல் சாசனத்தின் 11ஆவது பட்டியலில் குறிப்பிட்டுள்ளபடி, அந்தந்தப் பகுதிகளின் தேவைகளுக்காக ஊரக உள்ளாட்சி அமைப்புகளும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளும் பயன்படுத்தும்.
குறிப்பிட்ட நோக்கங்களுக்கான உள்ளாட்சி அமைப்புக்கான மானியங்கள், தூய்மைக்கான அடிப்படை சேவைகள், திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலையைப் பராமரித்தல் ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படும். இதில் வீட்டுக் கழிவுகளை நிா்வகித்தல் மற்றும் சுத்திகரித்தல் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக மனிதக் கழிவுகள் மற்றும் மலக் கசடுகளை அகற்றுதல், குடிநீா் விநியோகம், மழைநீா் சேகரிப்பு மற்றும் நீா் மறுசுழற்சி ஆகியவற்றுக்காக இந்த மானியங்கள் பயன்படுத்தப்படலாம் என ஒன்றிய பஞ்சாயத் ராஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.