பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அண்ணாமலையார் கோயிலில் ரூ.200 கோடியில் பெருந்திட்ட வரைவு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
தொடர்ந்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில், கலெக்டர் தர்ப்பகராஜ், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மணிவாசகம், ஆணையாளர் தர், எஸ்பி சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பேட்டி:
அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் பிரேக் தரிசனம் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது. தரிசன நேரத்தையும் நீட்டிக்க முடிவு செய்துள்ளோம். தற்போது தரிசன கட்டணம் ரூ.50 என்பதை ரூ.100ஆக உயர்த்த முடிவு செய்துள்ளோம். கட்டண தரிசன வரிசையில் காத்திருப்போருக்கு கழிப்பிடம், குடிநீர், அமரும் வசதி, கோயில் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு வசதி செய்யப்படும். ரூ.100 கட்டணத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் வசதி செய்யப்படும். பொது தரிசன வரிசையின் நீளம் அதிகரிக்கப்படும்.
பக்தர்கள் தங்குவதற்கான கூடுதல் கட்டிடம் கட்ட ஒப்பந்தம் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும். அடுத்த 20 ஆண்டுகளுக்கு தேவையான அளவில் கூடுதல் வசதிகளை செய்து தர திட்டமிடப்பட்டு, ரூ.200 கோடி மதிப்பில் பெருந்திட்ட வரைவுக்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் தொடங்கும். கோயிலுக்குள் செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்திருப்பதால், அந்த மொழிகளில் அறிவிப்புகள் எழுதப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.