ஊழலுக்கு எதிரான விவாதம் எனக்கூறி ‘யூடியூப்’ சேனல் மூலம் தீர்ப்பு சொல்லாதீர்கள்: கேரள நபரை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்
டெல்லி: ஊழக்கு எதிரான விவாதம் எனக்கூறி ‘யூடியூப்’ மூலமாக தீர்ப்பு சொல்லாதீர்கள் என்று கேரளாவில் வீடியோ வெளியிட்ட நபரை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் தனது ‘கிரைம் ஆன்லைன்’ என்ற யூடியூப் சேனலில், அம்மாநில பெண் அரசியல்வாதி ஒருவரை அவதூறாகவும், பாலியல் ரீதியாகவும் இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் அவரை காவல்துறை முன் சரணடைய உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நந்தகுமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஜூன் 18ம் தேதி இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு, அவருக்கு இடைக்காலப் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டது. ஒருவேளை அவர் கைது செய்யப்பட்டால், உரியப் பிணைய பத்திரங்களைச் செலுத்தி ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகரத்னா மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நந்தகுமார் தரப்பில், ‘பொது விவாதத்தை ஊக்குவிக்கவும், ஊழலுக்கு எதிராகப் போராடவுமே அந்த வீடியோ வெளியிடப்பட்டது’ என வாதிடப்பட்டது.
இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி நாகரத்னா, ‘என்ன பொது விவாதம் நடத்துகின்றீர்கள்? ஒருவரை குற்றவாளி எனத் தீர்மானித்து தீர்ப்பளிப்பதும், அவரை விடுவிப்பதும் நீதிமன்றங்களின் வேலை. உங்களது யூடியூப் வீடியோக்கள் ஒருபோதும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மாற்றாக இருக்க முடியாது. உங்கள் யூடியூப் வீடியோக்கள் மூலம் மக்களை குற்றவாளியாக்க விரும்புகிறீர்களா? யூடியூப் சேனல்களை எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? யூடியூப்பில் நல்ல விஷயங்களைப் பேசுங்கள். கடவுளின் தேசமான கேரளாவில் நடக்கும் நல்ல நிகழ்வுகளைப் பற்றிப் பேசுங்கள். எதிர்மறையாகப் பேசினால் தான் அதிக கவனம் ஈர்க்கும் என்பதால், இதுபோன்ற விவாதங்களை நடத்துகின்றீர்களா? ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு இது சரியான வழியாக இருக்கு முடியாது’ என்று கடுமையாகச் சாடினார்.
இறுதியில், கேரள அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து, நந்தகுமாருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் பாதுகாப்பையும் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.