10% முதல் 41% வரை புதிய வரிகளை விதித்து 92 நாடுகள் மீது வர்த்தகப் போர் தொடுத்த டிரம்ப்: புதிய பரஸ்பர வரிகள் இன்று தொடங்கி ஒரு வாரத்தில் அமலுக்கு வரும்
அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அதிபர் டிரம்பின் காலக்கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில், இந்தியாவுடன் எந்த வர்த்தக ஒப்பந்தமும் எட்டப்படாதது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவீத வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது குறைந்தபட்சம் 10% முதல் 41% வரை வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
‘தி கார்டியன்’ வெளியிட்ட செய்தி அறிக்கையின்படி, அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய வரிப் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற கூட்டமைப்பில் உள்ள நாடுகளையும் சேர்த்து மொத்தம் 92 நாடுகள் புதிய வரி விதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சிரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 41% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்புகளில், இந்தியாவில் இருந்து செய்யப்படும் ஏற்றுமதிக்கு 25%, தைவான் ஏற்றுமதிக்கு 20%, தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பொருட்களுக்கு 30% வரி ஆகியவை அடங்கும். பாகிஸ்தான் மீது 19% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான லெசோதோவுக்கு 50% வரி விதிக்கப்படும் என முன்பு டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தற்போது அந்நாட்டின் பொருட்களுக்கு 15% வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஐஸ்லாந்து, பிஜி, கானா, கயானா மற்றும் ஈக்வடார் ஆகியவற்றிலிருந்து இறக்குமதி செய்யப்படும்
பொருட்களுக்கும் 15% வரி விதிக்கப்படும்.
பிரேசில் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், இந்த உத்தரவில் 10% வரி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மெக்சிகோவுடன் 90 நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், தற்போதைக்கு அதன் மீதான 25% வரி தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா-மெக்சிகோ-கனடா வர்த்தக ஒப்பந்தத்தில் சேர்க்கப்படாத அனைத்து கனடா நாட்டுப் பொருட்களுக்கும் வரியை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சிரியா (41%), லாவோஸ், மியான்மர் (40%), ஈராக் (35%), லிபியா (30%), இலங்கை (20%) என உலகின் மிகவும் ஏழ்மையான மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட சில நாடுகளுக்கும் அபராதம் விதிக்கும் வகையில் இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. நடுநிலை நாடான சுவிட்சர்லாந்து கூட 39% என்ற அதிகபட்ச வரியை எதிர்கொண்டுள்ளது. இந்த உத்தரவின்படி, அனைத்து புதிய வரிகளும் அடுத்த ஏழு நாட்களில் நடைமுறைக்கு வரும்.
இதற்கான புதிய நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க வர்த்தகத்தில் நீண்டகாலமாக நிலவும் சமநிலையற்ற நடைமுறை காரணங்களை சுட்டிக் காட்டி, இந்தியா உட்பட 92 நாடுகள் மீது 10% முதல் 41% வரை புதிய பரஸ்பர வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கைகளின் கீழ், அதிபர் டிரம்ப் உத்தரவு கையெழுத்தான ஏழு நாட்களில் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை தெரிவித்து இருந்தாலும், ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் கப்பல்களில் ஏற்றப்பட்டு, அக்டோபர் 5ம் தேதிக்குள் அமெரிக்காவை வந்தடையும் பொருட்களுக்கு இந்த புதிய வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், கனடா மீதான வரியை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. சட்டவிரோத போதைப்பொருள் நெருக்கடியைக் கட்டுப்படுத்தத் தவறியதாலும், அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுத்ததாலும் இந்த வரி உயர்வு உடனடியாக ஆகஸ்ட் 1 முதல் (இன்று) அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரை, 15%க்கும் குறைவான வரி உள்ள பொருட்களுக்கான வரி விகிதங்கள் 15%க்கு சமமாக சரிசெய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.