உலக நாடுகளுக்கு ஷாக்!.. சிரியா மீது அதிகபட்சமாக 41% வரி விதித்த அமெரிக்கா: இந்தியாவிற்கு ஆக.7ல் அமல்!!
வாஷிங்டன்: சிரியா மீது இதுவரை இல்லாத அளவிற்கு 41% இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில மாதங்களுக்கு முன்பு பல உலக நாடுகளின் இறக்குமதி பொருட்கள் மீது வரிகளை அறிவித்திருந்தார். மற்ற நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கும் அளவுக்கு அந்தந்த நாடுகளுக்கு பல்வேறு விகிதங்களில் பரஸ்பர வரி விதிக்கப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு பிறகு அதனை நிறுத்தி வைத்தார்.
இதில், இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டப்படாததால், இந்தியாவுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார். இந்த கூடுதல் வரியை தவிர்க்க வேண்டுமெனில் அனைத்து நாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள டிரம்ப் 90 நாள் காலஅவகாசம் வழங்கினார். அந்த காலகெடு கடந்த 9ம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கூடுதல் வரி விதிப்புகள் அமலுக்கு கொண்டு வரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 7ல் நடைமுறைக்கு வருகிறது. ஆக.7ம் தேதிக்குள் கப்பல்களில் பொருட்கள் ஏற்றப்பட்டு அக்.5க்குள் அமெரிக்கா வந்தடையும் பொருட்களுக்கு கூடுதல் வரி கிடையாது. மொத்தம் 69 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதேசம் புதிய வரி விதிப்பு பட்டியலில் இருக்கும் நிலையில், சிறிய நாடுகளுக்கு 10% வரி விதிப்பையும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்க்காத வகையில், அதிகபட்சமாக சிரியா மீது இதுவரை இல்லாத அளவிற்கு 41% இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துள்ளது. அதேபோல் லாவோஸ் மற்றும் மியான்மர் மீது 40%, சுவிட்சர்லாந்து மீது 39%, செர்பியா மற்றும் ஈராக் மீது 35%, அல்ஜீரியா மற்றும் லிபியா மீது 30% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை போன்று வியாட்நாம் மற்றும் தைவான் நாடுகளுக்கு 20 முதல் 25% வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாகிஸ்தானுக்கு 19%, இஸ்ரேல், ஐஸ்லாந்து, நார்வே, பிஜி, கானா, கயானா மற்றும் ஈக்வடார் நாடுகளுக்கு 15% விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனடா நாட்டுக்கு மட்டும் பரஸ்பர வரி விதிப்பு 35% உடனடியாக அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.