"நலம் காக்கும் ஸ்டாலின்" முகாமில் அனைத்து பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு, பல் மருத்துவ சேவைகள் வழங்கப்படும் : ராதாகிருஷ்ணன் விளக்கம்!!
சென்னை : "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டம் குறித்து தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். அதில், "நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை முதல்வர் தொடங்கி வைக்கிறார். சென்னை மாநகராட்சியில் ஒரு மண்டலத்துக்கு ஒரு முகாம் வீதம் 15 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஒரு வட்டாரத்திற்கு ஒரு முகாம் என 388 வட்டாரங்களில் 1,164 முகாம்கள் நடத்தப்படும். மக்கள் தொகை 10 லட்சத்துக்கும் குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்கள் நடத்தப்படும். மக்கள் தொகை 10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 120 முகாம்கள் நடத்தப்படும்.
சனிக்கிழமைதோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறும். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள், குடிசை பகுதிகள் உள்ளிட்டவற்றில் முன்னுரிமை அடிப்படையில் முகாம் நடைபெறும். முகாமில் அனைத்து பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு மற்றும் பல் மருத்துவ சேவைகள் வழங்கப்படும். நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவும் முகாமில் வழங்கப்படும். முகாமில் இதயம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர்."இவ்வாறு தெரிவித்துள்ளார்.